இலங்கை 75: தேசியக்கொடியின் கட்டுக்கதைகள் – 1 தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இலங்கையின் தேசிய கீதத்துக்கு எவ்வளவு குழப்பகரமான வரலாறோ அதைவிட மோசடியான வரலாற்றை உடையது தேசியக் கொடி. தேசியக் கொடியின் கதை சொல்கின்ற செய்திகள் பல. அச்செய்திகள் இலங்கை அரசியல் வரலாற்றின் பல பக்கங்களைக் காட்டக் கூடியன. அதேவேளை இலங்கையின் வரலாறு எவ்வாறு கட்டுக்கதைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உண்மையையும் எமக்குக் காட்டுகிறது. எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியாதளவுக்கு ஏராளமான கட்டுக்கதைகளும் நிகழ்வுகளும் தேசியக் கொடியின் கதையோடு தொடர்புபட்டுள்ளன. நாம் இந்தக் கதையை இலங்கையின் சுதந்திரத்தோடு தொடங்குவோம்.

இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பற்றி 1940களின் நடுப்பகுதியிலேயே பேச்சுக்கள் அடிபடத் தொடங்கின. இந்தப் பின்புலத்தில் சுதந்திர இலங்கையின் தேசிய சின்னங்கள் பற்றிய உரையாடல்கள் தொடங்கின. அதில் முதன்மையான உரையாடல் சுதந்திர இலங்கையின் கொடி பற்றியது. 1945ம் ஆண்டு செப்டெம்பரில் இலங்கையின் சட்டவாக்க சபையில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன பின்வருமாறு சொன்னார்:

சிங்கக்கொடியானது இலங்கையின் மூன்று பகுதிகளான ரு{ஹணு, ரஜரட்ட மற்றும் மயராட்டை மீது ஆதிக்கம் செலுத்தியது. இந்த மஞ்சள் நிற கொடியின் நடுவில் சிங்கம் உள்ளது. இந்தியாவில் அசோகப் பேரரசர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சாஞ்சி ஸ்தூபிக்குச் சென்றீர்களாயின் இலங்கையில் விஜயன் இறங்கும் காட்சியானது கல்லில் செதுக்கியிருப்பதை நீங்கள் காணலாம். அக்காட்சியில் விஜயனின் குழுவில் உள்ள ஒருவன் சிங்கக்கொடியை ஏந்தியிருப்பதைப் பார்க்கலாம். அது 2,100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இவ்வளவு பழமையான பதிவு செய்யப்பட்ட கொடி உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு பழமையான அதேவேளை முக்கியமான இந்த சிங்கக்கொடியை அரசாங்கத்தால் செய்யப்படும் எந்த அலங்காரங்களிலும் அதை ஏன் மைய மற்றும் முக்கிய அம்சமாக மாற்றக்கூடாது.”

இந்த உரை மிகவும் முக்கியமானது. மூன்று அம்சங்களுக்காக ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் கூற்றை நாம் கூர்ந்து அவதானிக்க வேண்டும். முதலாவது கண்டி இராச்சியத்திற்கு வெளியே சிங்கள அரசுகள் அமைந்திருந்த பகுதிகளில் சிங்கக்கொடி ஆதிக்கம் செலுத்தியது என்பதன் ஊடு இந்தக் கொடி சிங்களவர்களின் கொடி என்ற கருத்துருத்துவாக்கத்தை உருவாக்குவதனூடு சிங்கக் கொடிக்கான சிங்கள மக்களின் அங்கீகாரத்தை பெற முயல்கிறார். இரண்டாவது விஜயனின் வருகையின் போது சிங்கக் கொடி பயன்படுத்தப்பட்டது என்ற கருத்துருவாக்கம் வரலாற்றோடும் தொன்மையோடும் சிங்கக் கொடியை இணைக்கின்ற ஒரு உத்தியாகும். மூன்றாவது முதல் இரண்டின் அடிப்படையில் வரலாற்று நோக்கிலும் அரசியல் அடையாளப்படுத்தலுக்காகவும் சிங்கக் கொடியை அரசாங்கத்தின் முக்கிய சின்னமாக மாற்ற வேண்டும் என்ற அவாவை அவர் வெளிப்படுத்துகிறார்.

இங்கு எழுகின்ற அடிப்படையான வினா, ஜே.ஆர். ஜெயவர்த்தன சொல்கின்ற தகவல்கள் உண்மையானவையா? என்பதாகும். இந்தக் தகவல்களில் எந்தவொரு உண்மையும் கிடையாது, இவை வெறும் கட்டுக்கதைகள் என்பதுதான் இவ்வினாவுக்கான சுருக்கமான பதில். இதனை விரிவாகப் பின்னர் ஆராய்வோம். முக்கியமானது யாதெனில் ஜே.ஆரினால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதைகள் இலங்கையின் தேசியக் கொடிக்கான வரலாற்று நியாயமாக இன்றும் சொல்லப்படுகின்றன.

1945 முதல் சுதந்திரம் வரையான காலப்பகுதியில் சிங்கக் கொடியைத் தேசியக் கொடியாக அறிவிப்பதற்கான பல முயற்சிகள் நடந்தன. அதற்கான சிங்கக்கொடிக்கான வரலாற்று நியாயங்களைக் கட்டமைக்கத் தொடங்கினார்கள். அதில் முதன்மையானது 1815ம் ஆண்டு கண்டி இராச்சியம் கைப்பற்றப்பட்டபோது கண்டி இராச்சியத்தின் கொடியாக சிங்கக்கொடி இறக்கப்பட்டு பிரித்தானியாவின் கொடி (யூனியன் ஜக்) ஏற்றப்பட்டது என்ற வாதமாகும். இத்தோடு தொடர்புடைய சில வரலாற்று நிகழ்வுகள் உண்டு. அவையும் மிகுந்த ஐயத்துக்கு உரியவை என்றும் கண்டி இராச்சியத்தின் கொடியாக சிங்கக் கொடி இருக்கவில்லை என்றும் பேராசிரியர் கணநாத் ஒபயசேகர ஆய்வுகளின் வழி நிறுவியுள்ளார்.

இலங்கை முழுமையாக சுதந்திரத்தை இழந்தபோது இறக்கப்பட்ட கொடி சிங்கக்கொடியே என்ற கருத்தை வலுப்படுத்தும் விடயங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இந்தப் பின்புலத்திலேயே இலங்கைக்குச் சுதந்திரம் கிடைப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முதலியார் அகமட் லெப்பே சின்னலெப்பே பின்வரும் பிரேரணையை முன்மொழிந்து ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறைச் செய்தார்.

“ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் உத்தியோக முத்திரையான வலது கையில் வாளேந்திய மஞ்சள் நிற சிங்கம் சிவப்பு நிறப் பின்னணியில் இருப்பதான கொடியானது, 1815இல் பிரித்தானியரால் அகற்றப்பட்டது. சுதந்திர இலங்கையின் தேசியக் கொடியாக இக்கொடியையே இந்தச் சபையானது ஏற்றுக் கொள்ள வேண்டும்”.

இந்தப் பிரேரணையானது ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் எழுதப்பட்டு சின்னலெப்பேயிடம் கொடுக்கப்பட்டது என்ற கருத்து உண்டு. சின்னலெப்பே ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1947இல் வெற்றிபெற்றுப் பாராளுமன்றம் சென்றவர். ஆனால் இவர் 1952ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வியடைந்தார். குறித்த பிரேரணை ஜே.ஆரினுடையது என்பதற்கான பல ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஜே.ஆர். சிறுபான்மையின பிரதிநிதியின் ஊடாக இப்பிரேரணையை முன்வைத்ததன் மூலம் இது முழு இலங்கையரின் விருப்பம் என்பதை நிறுவ முயன்றார்.

இந்தப் பிரேரணையை வழிமொழிந்தவர்களில் ஒருவர் டி.பி. ஜெயா. இதன் மூலம் இந்தக் கொடி குறித்து முஸ்லீம்களுக்கு எதிர்க்கருத்து இல்லை என்ற எண்ணம் உருவாக வழிவகுக்கப்பட்டது. சின்னலெப்போ போலவே தங்களது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காகவே இந்த பிரேரணையை வழிமொழிந்தார் என்றே கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதற்கு வழிமொழிந்த மற்றவர் ஏ.ஈ. குணசிங்க, தொழிற்சங்கவாதியாக இருந்தபோதும் அவரது சிறுபான்மையின எதிர்ப்பு நன்கறியப்பட்டது.

இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க “சுதந்திர தினத்தில் கொடி ஏற்றப்படுவதாயின் அது சிங்கக் கொடியாக இருக்க வேண்டும்;. நாம் எமது நாட்டை இழந்த போது, மக்கள் இங்கிலாந்து மன்னரை இறையாண்மையாகத் தேர்ந்தெடுத்த போது, இறக்கப்பட்ட கொடி இதுவே. இப்போது இங்கிலாந்து இறையாண்மையை இந்தத் தீவின் மக்களுக்கு மீண்டும் தருவதால், அவர்கள் எங்களுக்குத் திருப்பித் தரும் இறையாண்மையுடன் அவர்களின் அந்தக் கொடியை மாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த முக்கிய காரணத்திற்காகவே சுதந்திர தினத்தன்று சிங்கக் கொடியை ஏற்ற திட்டமிட்டுள்ளோம். இந்தக் கொடியை ஏற்றுவதன் மூலம் பிரித்தானியா அவர்கள் இறையாண்மையை எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள் என்பதைக் காட்டுவோம், அதை வெளியில் உள்ள மக்களுக்குத் தெரியப்படுத்துவோம். சுதந்திர தினத்தன்று நாம் ஒரு கொடியை ஏற்ற வேண்டுமானால் அது இந்த சிங்கக் கொடியாக இருக்க வேண்டும், வேறு எந்தக் கொடியாகவும் இருக்கக் கூடாது” என்று சொன்னார்.

பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. இடதுசாரிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. கொடி பொதுவானதாகவும் அனைவருக்கானதாகவும் இருக்க வேண்டும் என்று கோரினார்கள். இதில் கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹேர்பேர்ட் ஸ்ரீ நிசங்க “நாங்கள் இப்போது ஒரு புதிய ஆட்சியின் கீழ் இருக்கிறோம். சிங்கக் கொடி சிங்களக் கொடியே தவிர, தேசியக் கொடியல்ல, ஏனைய சமூகத்தினரும் அதற்கு வணக்கம் செலுத்துமாறு கோர முடியாது” என்றார். இவர் பின்னாளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நிறுவுவதில் முக்கிய பங்களித்தவர்.

பாராளுமன்றத்தில் பலர் இக்கொடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இக்கொடி தேசியக் கொடி அல்ல என்றும் இது சிங்களக் கொடி என்றும் வாதிட்டார். இவரது கருத்தை கோப்பாய் தொகுதி உறுப்பினர் வன்னியசிங்கம் ஆதரித்தார். இதேவகைப்பட்ட கருத்தையே பண்டாரவள தொகுதி உறுப்பினர் கே. நடராஜாவுக்கு வலியுறுத்தினார். பல சிங்கள உறுப்பினர்கள் வாளேந்திய சிங்கம் என்பது கண்டி இராச்சியத்தில் பாவிக்கப்பட்ட அரச முத்திரைகளில் ஒன்றேயன்றி அது தேசியக் கொடி இல்லை என்றும் கூறினர். நாட்டின் பல்லினத் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் புதிய கொடியின்  தேவையை எடுத்துரைத்தனர். அனைத்து சமூகத்தினருக்குமான ஒரு கொடி தேவை என்றனர். தேசியக் கொடியானது சிங்கம், நந்தி மற்றும் பிறை ஆகியவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றுவதைத் தடுக்க பாராளுமன்றத்தில் இருந்த முற்போக்கான பிரதிநிதிகள் பலர் போராடிக் கொண்டிருந்தனர். மறுபுறம் சிங்களத் தேசியவாதிகள் இக்கொடியை எப்படியாவது ஏற்றிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். மிகவும் காரசாரமான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது கருத்துரைக்க எழுந்த சி. சுந்தரலிங்கம் “கொடியை ஏற்றுங்கள், பிறகு மாற்றுங்கள்” என்று கருத்துரைத்தார்.

இந்தக் கருத்தையும் முஸ்லீம் பிரதிநிதிகள் இப்பிரேரணையை முன்மொழிந்து வழிமொழிந்ததையும் காரணமாகக் காட்டி சிங்களத் தேசியவாதிகள் சிங்கக்கொடியை சுதந்திரத்தின் போது ஏற்றினார்கள். இந்த சுந்தரலிங்கத்தைத் தான் “அடங்காத்தமிழன்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

கயவர்களை எம்மத்தியில் வைத்துக்கொண்டு மற்றவர் மீது சுட்டும் விரல் தவிர்ந்த நான்கு விரலும் நம்மைச் சுட்டுகின்றன என்ற உண்மை சுடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE