கோடை கால விடுமுறையில் நாங்கள் எமது தாய் நாட்டுக்கு செல்லவிருக்கின்றோம். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயில் வசித்து வந்துள்ளோம். அத்துடன் இங்கு நோர்வேயில் பிறந்த 10, 12 வயதுடைய எனது இரண்டு பிள்ளைகளையும் அழைத்து சொல்லுகின்றோம். எமது பயணத்தின் போதும், அங்கு கழிக்கவிருக்கும் 4 வாரங்களும் நாம் பொதுவான நோயில்லாமல் வாழ உங்கள் ஆலோசனைகள் தர முடியுமா?
முதலில் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு தாயகம் செல்ல திட்டமிடுவது வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதுமாகும். பிற நாடு, பிற மொழி, பிற கலாச்சாரத்துள் வாழும் பிள்ளைகள் பெரும்பாலும் தம்மை இந்நாட்டுப் பிரசைகளாகவே அடயாளப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களது பூர்வீகத்தை சரிவர புரியவைப்பது தங்களது அடையாளம் தொடர்பாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சந்தேகங்களை தவிர்க்கவும், தீர்க்கவும் உதவியாகவிருக்கும். ஆனால் இவ்வாறான பயணங்கள் வெற்றிகரமாக அமைய வேண்டுமானால் பிள்ளைகளுக்கு அது ஒரு நல்ல அநுபவமாக இருக்க வேண்டும். அடுத்த விடுமுறைக்கும் எங்களை அங்கே அழைத்துச் செல்லுங்கள் என ஒற்றைக்காலில் நிற்கவேண்டும்.
வளர்ந்தவர்களாகிய எமக்கு எமது இளமைக்காலங்களை மீட்பது, நண்பர்கள், உறவினர்களை சந்திப்பது, ஆலயங்களை தரிசிப்பதென பல அவாக்களும், மனதிற்கு திருப்திதரும் விடயங்களும் நிறைந்திருக்கும். ஆனால் எமது பிள்ளைகளுக்கு அப்படி இருக்கவேண்டுமெண்டில்லை. எனவே அவர்களும் விடுமுறையை நன்கு அநுபவிக்கும் வண்ணம் பயணத்தை திட்டமிடவேண்டும். கவனத்தில் எடுக்கவேண்டிய விடயங்கள் பற்றி சில ஆலோசனைகள்.
தோல் வருத்தங்கள்
அதிக வெப்பநிலையாலும் வியர்வையாலும் உடலில் பருக்கள் போடலாம். இவ்வாறு நிகழ்ந்தால், காலையும், மாலையும் குளித்து உடலை குளிர்மையாக வைத்துக்கொள்ளுவது, மெலிய புளுக்கமில்லாத ஆடைகளை அணிவது, நேரடி சூரியஒளியை தவிர்த்துக்கொள்வது நலம்.
பூச்சி புழுக்கள் கடிப்பதால் சிறு புண்கள்; சொறி போன்றவை ஏற்படலாம். முதலில் காரணத்தைக் கண்டறிந்து அவற்றிடமிருந்து விலகியிருக்க வேண்டும். வைத்திய உதவியை நாடி அவற்றுக்கான மருந்துகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நுளம்புவலை பாவித்தல்இ இங்கிருந்து கொண்டு செல்லக்கூடிய உடலில்பூசும் மருந்துகளை பாவித்தல். உறங்கும் போது உடலை மூடக்கூடிய ஆடைகளை அணிந்து தூங்குதல் நலம்.
உணவால் ஏற்படக்கூடிய உபாதைகள்
பழைய கெட்டுப்போன உணவுகள், பழவகைகள், தூய்மையாக தயாரிக்கப்படாத உணவுகள், பானங்களிலிருந்து இலகுவில் தொற்று ஏற்படுவதால் வயிற்றோட்டம், வாந்தி போன்றவை பயணங்களுக்கு இடையூறாக அமைவதோடு, உடலில் நீர்பற்றாக்குறையையும், வரட்டுத் தன்மையையும் ஏற்படுத்தும்.
எனவே சுகாதாரக் குறைவான உணவருந்துவதை தவிர்ப்பது. பழுதடைந்ததென சந்தேகிக்கும் உணவுகளை உண்ணாமல் தவிர்ப்பது. குளிர்மையான உணவுகளையும், பானங்களையும் உட்கொள்வது அவசியம்.
தவிரவும், இலங்கையில் மலேரியா, டெங்கு போன்ற தொற்றுநோய்கள் காலத்திற்கு காலம் பரவிவருவதுண்டு முடிந்தால் அவ்வாறான இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளலாம்.
இங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு இங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுவதும், தேவையான தடுப்பு உபகரணங்களை எடுத்துச் செல்வதும் நலம்.
இவை, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்கள் சில. இந்த அறிவுரைகள் உங்கள் விடுமுறையை மேலும் செழிப்புறச் செய்யவேண்டுமே தவிர பயத்தில் தாயகம் செல்லாமல்விடவோ அல்லது அங்கு சென்று வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கவோ வழிசமைக்கக்கூடாது. முடிந்தவரை உங்கள் குழந்தைகள் அங்குள்ள உறவுகளுடனும், சூழலுடனும் உரிமையுடன் உறவுகளை வளர்த்து வரவேண்டும்.
உங்கள் விடுமுறை இனிதே அமைய வாழ்த்துகள்.