இன்று முதல் இலங்கையில் புதிய கட்டுப்பாடுகள்..!ஒமிக்ரோன் அச்சுறுத்தல்!

இலங்கையில் இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நடைமுறைக்கு வரும் வகையில் புதிய சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சுகாதார வழிகாட்டியை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana) வெளியிட்டுள்ளார்.

கோவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த குறித்த சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி மண்டபங்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகளில் ஆகக்கூடியது 200 பேர் வரையிலும் வெளியிடங்களில் நடத்தப்படும் திருமண வைபவங்களில் ஆகக்கூடியது 250 பேர் வரையிலும் கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திரையரங்குகளில் ஒரு காட்சிக்கு, இருக்கை எண்ணிக்கையில் 75% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதுடன், அலுவலகம் மற்றும் தொழில்முறை சந்திப்புகளில் 150 பேர் மட்டுமே பங்குபற்ற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மரண சடங்குகளில் 20 பேர் மாத்திரமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், வர்த்தக நிலையங்கள், மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகளில் ஒரே தடவையில் மூன்றில் ஒரு வீதமானோருக்கே அனுமதி வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், இவ்வாறு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, வழிபாட்டுத்தலங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் தற்போது கோவிட்டின் வீரியம் மிக்க திரிபான ஒமிக்ரோன் தொற்று தலைதூக்கியுள்ள நிலையில், இலங்கைக்கும் இது தொடர்பான ஆபத்து இருப்பதாக சுகாதார பிரிவினர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE