பாஸ்போர்ட் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் – பிரித்தானியர்கள்

கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து புதிய பாஸ்போர்ட் கோரி ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால், அவற்றைப் பரிசீலிக்க 10 வாரங்கள் வரை ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளதால், கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பிரித்தானியர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், கூடுதல் தலைவலியாக மற்றொரு பிரச்சினையும் சேர்ந்துகொண்டுள்ளது. அதாவது, பாஸ்போர்ட்கள், அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டுவிட்டாலும், அவை விண்ணப்பித்தவரை வந்தடைய வழக்கமான நேரத்தை விட தாமதமாகிறது.

பாஸ்போர்ட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் கூரியர் நிறுவனமான TNT நிறுவனம் எக்கச்சக்கமான பாஸ்போர்ட்களை பட்டுவாடா செய்யவேண்டியுள்ளதால், அவை விண்ணப்பித்தவர்களை சென்றடைய அதிக கால தாமதமாகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி விடுமுறைக்காக வெளிநாடு செல்வதற்காக டிக்கெட்களை பதிவு செய்துவிட்டு தங்கள் பாஸ்போர்ட் வருவதற்காக காத்திருக்கும் சிலர், தங்கள் பாஸ்போர்ட்டைத் தேடி தாங்களே கூரியர் அலுவலகங்களுக்கு படையெடுத்துவருகிறார்கள்.

TNT கூரியர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்தால், நீண்ட நேரத்துக்கு யாரும் அழைபை ஏற்பதில்லை என்ற புகாரும் எழ, வெறுப்படைந்த சில பிரித்தானியர்கள் இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்தக்கோரி புகார் மனு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

அந்த மனுவில், கடந்த சில மாதங்களாக எங்கள் பாஸ்போர்ட்கள் டெலிவரி செய்யப்படுவதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவருகிறது.

இதனால் பலர் தங்கள் வெளிநாட்டு பயணத் திட்டத்தையே ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.

மற்ற பல கூரியர் நிறுவனங்களைப் போல, TNT டெலிவரி செய்யும் பொருட்களை ட்ராக் செய்வதற்கான சரியான வசதிகளும் இல்லை.

சிலரது ஆவணங்களை TNT தவறவிட்டும் உள்ளது. ஆகவே, இந்த பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாமதத்திற்காக TNT நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், சரியான நேரத்தில் பாஸ்போர்ட்களை டெலிவரி செய்ய கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE