வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில், நேற்று முன்தினம் இரவு, சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
இது, ரிக்டர் அளவுகோலில், 6.8 ஆக பதிவாகி உள்ளதாகவும், மொராக்கோவின் சுற்றுலாத் தலமான, மாரகேஷ் பகுதியில் இருந்து, 72 கி.மீ., தொலைவில், 18.5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்துக்குப் பின், 19 நிமிடங்கள் கழித்து, 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், அல்-ஹவுஸ், மாரகேஷ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.
இந்த நகரங்களில் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பீதியடைந்த பொது மக்கள், வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இரவு நேரம் என்பதால், மக்கள் வீடுகளில் உறங்கிய நிலையில், கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர்.இந்த நிலநடுக்கத்தால், மராகேஷ் நகரில் உள்ள, 12ம் நுாற்றாண்டின் கவுடோபியா மசூதி சேதமடைந்தது.
இதே போல், ‘யுனெ ஸ்கோ’வின் உலக பாரம்பரிய தலமான, மராகேஷில் உள்ள புகழ்பெற்ற சிவப்பு சுவர்களின் பகுதிகளும் சேதம் அடைந்தன. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி, 1,037 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,200 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.