கொழும்பு நகரத்தை சுற்றிக்காட்ட, இலட்சம் ரூபாய்களை ஏப்பமிட்டவர் கைது

கொழும்பு நகரத்தை ஒரு ரவுண்ட் ​அடித்து, சுற்றிக்காட்டுவதற்காக ஒன்றரை இலட்சம் ரூபாயை, நியூஸிலாந்து பிரஜையிடம் இருந்து ஏமாற்றி பெற்றுக்கொண்ட முச்சக்கரவண்டியின் சாரதியொருவர், இரண்டு வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டார்.

நாட்டுக்கு சுற்றுலா வந்திருந்த நியூஸிலாந்து பிரஜையிடம் கொழும்பை சுற்றிக்காட்டுவதற்கான ஒட்டோ கட்டணமாகவே அவர், ஒன்றரை இலட்சம் ரூபாயை ஏமாற்றி பெற்றுக்கொண்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டுள்ள சுற்றுலா வழிகாட்டியை எதிர்வரும் 14ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க, 1 ஆம் திகதி உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு நியூஸிலாந்து பிரஜையினால் 2020 பெப்ரவரி 11ஆம் திகதியன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

இவ்வாறான மோசடி தொடர்பில் கோட்டை பொலிஸார், சுற்றுலா வழிகாட்டியை இனங்கண்டுகொண்டதன் பின்னர், கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தினர் என்று சுற்றுலா பொலிஸ் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 

தெல்கொடவை வசிப்பிடமாகக் கொண்டி கஹூபிட்டியகே திலின மதுசங்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டியாவார்.

 

முறைப்பாட்டாளரான நியூஸிலாந்து பிரஜை, கப்பலின் மூலமாக இந்நாட்டுக்கு வருகைதந்து, கொழும்பு நகரை சுற்றிப்பார்ப்பதற்காக, சந்தேகநபரான ஓட்டோ சாரதியிடம் விலையை கேட்டுள்ளார்.

 

அதனடிப்படையில் 20 டொலர்களை சந்தேகநபர் கேட்டுள்ளார் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டொலர் 4,500 ரூபாவாகும் என குறிப்பிட்டுள்ள முச்சக்கரவண்டியின் சாரதி, பயணத்துக்கான கட்டணத்தை இலங்கை ரூபாவில் தருமாறும் கேட்டுள்ளார்.

 

அதன் பின்னர் தன்னிடமிருந்த ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி, அந்தக் கட்டணத்தை முறைப்பாட்டாளரான நியூஸிலாந்து பிரஜை வழங்கியுள்ளார் என்றும் ​நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸார் கொண்டுவந்தனர்.

 

கைது செய்யப்பட்ட சுற்றுலாத்துறை வழிகாட்டியிடம், கடுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன என்று தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை பொலிஸார், அது தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE