ஹரீஸ் போன்ற அரசியல்வாதிகளை இல்லாமல் செய்ய வேண்டும் – கலையரசன்

கல்முனையில் தமிழ் சமூத்தை அழிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், தமிழர்களுடைய எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்ற செயற்பாடுகளிலே ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

சொறிக்கல்முனை ஹோலிக்குறோஸ் வித்தியாலய அதிபர் மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

 

“அம்பாறை மாவட்டத்தை பொறுத்தமட்டில் தமிழர்களாக இருக்கின்ற நாங்கள் குறைந்த நிலையிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

 

எம்மை நசுக்கி ஆழுகின்ற அரசியல் தலைவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்களை விட சகோதர முஸ்லிம் மக்கள் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றனர்.

 

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தமிழர்களுடைய எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கின்ற செயற்பாடுகளிலே இருந்து கொண்டிருக்கின்றார். அவரின் செயற்பாட்டின் மூலம் இந்த இனங்களுக்கிடையே இருக்கின்ற ஒற்றுமை இல்லாமல் போய்விடும் நிலைமை அதிகமாகவுள்ளது.நான் ஏனைய சமூகங்களை இணைத்து பயணிக்கின்ற அரசியல்வாதியாக இருந்திருக்கின்றேன் அவர் இன்று கூட ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

 

தமிழர்கள் இரட்டைவேடம் போடுவதாக, நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் இரட்டை வேடம் போட்டவர்கள் அல்ல ஒரு சமூகத்தை அழிக்கின்ற பணிகளை முன்னெடுத்தவர்கள் அல்ல அவ்வாறு முன்னெடுக்கின்ற ஒரு அரசியல்வாதி கல்முனை பிராந்தியத்தில் உள்ள நாடாளுமன்ற உறப்பினர் ஹரீஸ்.

 

இந்த நாட்டிலே தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் செயற்பட்டுவரும் ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் அந்த தமிழ் பேசும் என்பது தமிழர்களையும் முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

 

ஆனால் அவர்கள் அவ்வாறு இல்லை இனம் மதம் என்ற அடிப்படையில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளாகவே அவர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர்.

 

ஒரே சிந்தனை, ஒரே கொள்கை, ஒரே கோட்பாடு

 

அவர்களுடைய செயற்பாடு எதிர்காலத்தில் இந்த இரண்டு இனங்களையும் பிரிக்கின்ற அல்லது அழிக்கின்ற செயற்பாடாக இருக்கும். சமூகத்தை பிரிக்கின்ற நோக்கத்தோடு இந்த அரசியல்வாதிகள் செயற்படுகின்றனர்.

 

நாங்கள் அவ்வாறு இல்லை ஒரே சிந்தனை ஒரே கொள்கை ஒரே கோட்பாடு நாங்கள் வருகின்ற அரசாங்கத்துக்கு எல்லாம் கையை உயர்த்திவிட்டு காலில் விழுபவர்கள் அல்ல.

 

நாங்கள் துணிகரத்தோடு உண்மையை நியாயத்தை அநீதியை தட்டிக்கேட்கின்ற அரசியல்வாதிகளாக செயற்படுகின்றோமே தவிர நாங்கள் எந்த சலுகைகளுக்கும் துணையாக இருந்து செயற்படுபவர்கள் அல்ல என்பதை ஹரீஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொல்லி வைக்கின்றேன்.

 

கல்முனை வடக்கு பிரதேசம் நிர்வாக ரீதியாக இயங்குகின்றது அதன் நிர்வாக நடைமுறைகளை முடக்குகின்றார்கள் அதற்கு அரசாங்கத்தில் இருக்கின்ற சில அதிகாரிகள் துணையாக இருக்கின்றனர்.

 

எனவே இவ்வாறான அரசியல்வாதிகளை முஸ்லிம் சமூகம் இல்லாமல் செய்ய வேண்டும் தமிழ் சமூகத்தையும், முஸ்லிம் சமூகத்தையும், சிங்கள மக்களையும் இணைக்கின்ற அரசியல்வாதிகளை நாங்கள் உருவாக்க வேண்டும் இதன் மூலம் தான் இந்த மாவட்டம் மாத்திரமல்ல, மாகாணம் மாத்திரமல்ல இந்த நாடும் முன்னேறும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE