முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கொழும்பு அரசியல் மட்டங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இம்மாத இறுதியில் நாடு திரும்புவார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இச் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, கோட்டாபயவின் வருகை பிற்போடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் வீடு அமைந்துள்ள மிரிஹான பகுதியிலும், அதனைச் சூழவுள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்குமாறு பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகள் விசேட கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் கடும் போராட்டங்கள் வெடித்தது.
மக்களின் போராட்டம் காரணமாக கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் இருந்து மாலைதீவு சென்றதுடன் அங்கிருந்து ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றார்.
கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் கோட்டாபய சிங்கப்பூரில் ஒரு மாதம் அளவில் தங்கியிருந்தார். பின்னர் சிங்கப்பூர் விசா காலம் முடிவடைந்த நிலையில் அங்கிருந்து தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்டார்.
கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது எதிர்வரும் 24ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என அவரது நெருக்கிய தரப்பினர் ஊடகங்களுக்கு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.