போராட்டக்காரர்களை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது -கமால்

நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக கட்டமைப்பிற்கும் தேசிய பாதுகாப்பே பிரதானமானது. தேசிய பாதுகாப்பு இல்லாத எந்தவொரு நாட்டிலும் முதலீடுகளை செய்ய எந்தவொரு முதலீட்டாளரும் முன்வர மாட்டார்கள் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு, சட்டம் தொடர்பில் ஊடக அறிக்கையிடல் தொடர்பில் அரச தகவல் திணைக்களத்தில்  இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அபிவிருத்தியடையாத நாடாக இருந்தாலும், அபிவிருத்தி அடைந்துவரும் நாடாக இருந்தாலும், அல்லது அபிவிருத்தி அடைந்த நாடாக இருந்தாலும், அந்நாடு முன்னோக்கி செல்ல வேண்டும் என்றால் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதில் விவாதிக்க ஒன்றுமே இல்லை. தேசிய பாதுகாப்பு இல்லாத எந்தவொரு நாடும் முன்னோக்கி செல்லாது எனக் கூறிய அவர், தேசிய பாதுகாப்பு இல்லாத எந்தவொரு நாட்டிலும் முதலீடுகளை செய்ய எந்தவொரு முதலீட்டாளரும் முன்வரவும் மாட்டார்கள் என்றார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாத ஒரு நாட்டின் மக்களின் வாழ்க்கை முறைமை முன்னோக்கி செல்லாத காரணத்தினால் அந்த நாட்டிற்கு உதவிகளையும், ஒத்துழைப்புக்களை வழங்க எந்தவொரு நாடும் அவ்வளவு இலகுவாக முன்வரப்போவதும் இல்லை. இலங்கையை பொறுத்த வரையிலும் தேசிய பாதுகாப்பு நாட்டின் முதுகெலும்பாக இருக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பான நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும், இல்லையேல் நெருக்கடி நிலைமையே ஏற்படும். அதுமட்டுமல்ல காட்டு சட்டத்தினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. வன்முறைகளை தூண்டிய, பொலிஸாரை தாக்கிய, தகாத வார்த்தைகளில் விமர்சித்து போராடிய நபர்களை கைது செய்த போது அவர்களை காப்பாற்ற சட்டத்தரணிகள் ஒரு சாரார் முன்வருகின்றனர். அதுமட்டுமல்ல நீதிமன்றத்திற்கு உள்ளே கைகளை தட்டி போராட்டக்காரர்களை ஆதரிக்கின்றனர். இவ்வாறான நிலையொன்றே உருவாகியுள்ளது. ஆனால் மறுபக்கம் தாக்கப்பட்ட பொலிஸாரின் மன நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE