பாராளுமன்றத்திற்குள்ளும் அடக்குமுறை, சூனிய வேட்டை – டளஸ்

நாடாளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு, ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்ற விடயங்களில், அரசாங்கம் விரோதமான முறையில் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தமக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் நாடாளுமன்றக் குழுக்களின் பதவியில் அமர்த்துவதில்லை என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதாக அழகப்பெரும தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தனது வெறுப்பையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முன்னதாக அரசாங்கத்தின் மோசடி மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை அம்பலப்படுத்துவதற்கு நிபந்தனையின்றி உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய நாடாளுமன்ற ஆட்சிக் காலம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தில் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது, மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரம் சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, தாம், பல தசாப்தங்களாக தொடர்ச்சியாகப் பணியாற்றிய நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவிற்கும் பொதுக் கணக்குக் குழுவிற்கும் நியமனங்களை வழங்குவதற்கான வழிநடத்தல் குழுவிலிருந்து நீக்கப்படுள்ளதாக குறிப்பிட்டுள்ள, அழகப்பெரும, இது பொருத்தமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே குழுவிலிருந்து ஜனாதிபதி பதவிக்கான தமது நியமனத்தை உறுதிப்படுத்திய சர்வதேச அங்கீகாரம் பெற்ற புத்திஜீவியான, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் டிலான் பெரேரா மற்றும் நாலக கோடஹேவா ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.

சபாநாயகர் இதுவரை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காவிட்டாலும், தனக்கு ஆதரவாக செயற்பட்ட பொது நிறுவனங்களுக்கான குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர உள்ளிட்டோர், அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளானதன் பின்னர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹேரத், வளைந்துகொடுக்காத ஊழல் எதிர்ப்புக் கொள்கைகளுக்காக பொதுமக்களின் மதிப்பைப் பெற்றவர் என்பதை யாரும் அறிவர் என்றும் அழகப்பெரும பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், மறுபுறம், அவருக்கு எதிராக ஜனாதிபதி தேர்தலில், போட்டியிட்ட பிரதான எதிரியான தமக்கும், தமக்கு ஆதரவளித்தவர்களுக்கும் , எதிராக அரசாங்கம் இப்போது சூனிய வேட்டையை மேற்கொண்டு வருவதாக அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கையின் பல தசாப்த கால பழமையான பாழடைந்த அரசியலின் எச்சங்களின் மற்றுமொரு காட்சியே இதுவாகும். எனவே தம்மை பொறுத்தவரை தற்போதைய சூழ்நிலையில், 21 நாட்களுக்கு முன்னர் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனம் வெறும் கண்துடைப்பு மற்றும் பொய்யானது என்று டளஸ் அழகப்பெரும விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE