இலங்கை நிலவரம்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் போராட்டம் வலுத்துவரும் சூழலில் பல அமைச்சர்கள் இராஜினாமா செய்தனர். அவர்களின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இலங்கையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த தேசிய அரசை அமைக்க விரும்புவதாகவும், அமைச்சரவை பொறுப்புகளை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்..ஆனால் இலங்கை அமைச்சரவை கூண்டோடு இராஜினாமா செய்ததன் எதிரொலியாக இலங்கை பங்குச்சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது,மக்கள் காலிமுக திடலில் முகாமிட்டு “Go Home Gota ” என்ற மகுடத்துடன் ஜனாதிபதியையும் அவரின் அமைச்சர்களையும் வீட்டுக்கு போகும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இலங்கை அந்நியச் செலாவணி தட்டுப்பாடு மற்றும் கடும் பொருளாதார சிக்கலில் சிக்கி  தவியாய்  தவிக்கிறது. ஆனால் உலக நாடுகள் கண்டும் காணாமல் இருக்கின்றன,அரசனை நம்பி புருஷனை கை விட்டதுபோன்ற நிலைமையை இலங்கை இப்போது அனுபவிக்கிறது . உணவு பொருட்கள்,எரிவாயு ,பால்மா  எரிபொருளுக்கு மக்கள் திண்டாடுகின்றனர். மின்சாரம் ஒருநாளில் அரைவாசி நேரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாதத்தின் ஆரம்ப நாட்களில்  இரவு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.இதைக் கண்டித்து ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பொலீஸ் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. 5 பொலீஸார் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து  நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மொன்று நாட்கள் நீடித்து மூன்றாம் நாள் அதிகாலை  6 மணியுடன் முடிவுக்கு வந்தது.போராட்டம் பரவுவதைத் தடுக்க, பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லாத நிலையில்  அவை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன. #GoHomeRajapaksas”, “#GotaGoHome ஆகிய ஹேஷ்டேகுகள் கடந்த சில நாட்களாகவே இலங்கையில் ட்ரெண்டாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.நெருக்கடியான சூழலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா 40,000 டன்கள் டீசல் வழங்கியது. அரிசி, மருந்துப் பொருட்களையும் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. 40 ஆயிரம் டன்கள் அரிசியையும் அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்தது. கடந்த மாதம் இரு நாடுகளும் 1 பில்லியன் டொலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன் தொடர்ச்சியாக பொருளாக உதவி அனுப்பவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் இருமடங்காக உயர்ந்துள்ள பொருட்களின் விலையை இலங்கை அரசு குறைக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது .ஆனால் இன்றுவரை பொருட்களின் விலை குறைந்தபாடில்லை இம்மாதம் 18 ஆம் திகதி மேலும் 35 ரூபாவால் எரிபொருள் விலை உயர்ந்தது.நிலைமை இப்படி இருக்க ஏப்ரல் 18 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச புதிய அமைச்சரவையை நிறுவினார் அதில் – 21 புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் முன்னெடுக்கப்பட்டது.G.L பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க லொஹான் ரத்வக்க – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  இந்திக அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்  சிறிபால கமலத் – மகாவெலி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்  சிசிர ஜயகொடி -சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர – கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்  டீ.வி.சானக்க – சுற்றாடல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்  டீ.பி.ஹேரத் – கால்நடைவள இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார பயிர்செய்கை மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்  அரவிந்த்குமார் – தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க – கலாசார இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை விற்பனை அபிவிருத்தி மற்றும் நுர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கபில நுவன் அதுகோரல – சிறு ஏற்றுமதி பயிர்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கயாஸான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் கல்வி சேவை மற்றும் மருசீரமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.இது அரசியலில் இன்னும் நெருக்கடி நிலைமையை தோற்றுவித்துள்ளது .ஜனாதிபதி உள்ளிட்டோரை வீட்டுக்கு போகும்படி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும்போது ஜனாதிபதி தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை பகடை காய்களாக செயற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .இதற்கிடையில் அமைச்சரவை நியமத்தை பின் இரவு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி – இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக நாடு தீர்மானமிக்கதொரு தருணத்தை எதிர்கொண்டுள்ள சந்தர்ப்பத்திலேயே இன்று நான் உங்களிடம் உரையாற்றுகிறேன்.நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதையே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். மேலும், உங்கள் கீழ் உள்ள நிறுவனங்களை ஊழலற்ற, மக்களுக்கு சேவை செய்ய அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாக மாற்றுங்கள். பல அரச நிறுவனங்கள் இன்று கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.அவை சரி செய்யப்படுவது மிகவும் அவசியம். நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய பணிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அமைச்சுப் பதவிகள் கிடைத்தவுடன், தமக்குக் கிடைக்கும் அமைச்சுக்களிலும் நிறுவனங்களிலும் தொழில் வழங்குவதற்குத் தயாராகி வருவதை நாம் அறிவோம்.மக்கள் கோரிய முறைமையை (System Change) மாற்ற இன்றைய நெருக்கடி ஒரு நல்ல சந்தர்ப்பம். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த இளைஞர்களிடம் அதற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.கடந்த இரண்டரை வருடங்களாக நாங்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளோம். கொவிட் தொற்றுநோய் அதேபோன்று கடன் சுமை போன்ற விடயங்கள். அவ்வாறிருந்தாலும் எங்களாலும் பல தவறுகள் இடம்பெற்றுள்ளன. அவை சரி செய்யப்பட வேண்டும். அவற்றை சரி செய்து கொண்டே நாம் முன்னேற வேண்டும். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டும்.எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் . அதைவிட இந்த பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பல சிக்கல்களால் இன்று மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரிசையில் நின்று நேரத்தைச் செலவழிப்பதால் ஏற்படும் வேதனையும், அசௌகரியமும், கோபமும் மிகவும் நியாயமானது.கடந்த காலத்தில் என்ன குறைகள் ஏற்பட்டு இருந்தாலும், தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்களை நிர்வகிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான எனது பொறுப்பாகும்.எந்த சிரமத்திற்கும் சவாலுக்கும் மத்தியிலும் அந்தப் பொறுப்பில் இருந்து விலக மாட்டேன் என்று என்னை நியமித்த மக்களிடம் உறுதியளிக்கிறேன்.தற்போது சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளில் நாம் முன்னுரிமை வழங்க வேண்டியது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கே ஆகும். அதைத் தீர்க்காமல் வேறு எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது.எனவே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நான் ஏற்கனவே பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளேன்.அதன் அடிப்படையான மற்றும் முக்கியமான நடவடிக்கைகளாக புதிய நிதியமைச்சர் ஒருவர், நீண்டகால அனுபவமுள்ள மத்திய வங்கியின் புதிய ஆளுநர் மற்றும் திறைசேரியின் புதிய செயலாளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரசாங்கத்திற்கும் எனக்கும் ஆலோசனை வழங்குவதற்காக சர்வதேச அனுபவமும் பொருளாதார முகாமைத்துவத் துறையில் உயர் அங்கீகாரமும் கொண்ட மூன்று பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளேன். மேலும், அரசுக்கு உதவுவதற்காக பொது மற்றும் தனியார் துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் . இந்த கருத்துக்களை மக்கள் நிராகரித்து கோஷங்களை எழுப்பி ஜனாதிபதி வீட்டுக்கு போகும்வரை போராட்டம் தொடரும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE