உங்கள் வொர்க்பிளேஸ் என்று சொல்லப்படும் நாற்காலியிலேயே 10 நிமிடங்கள் செய்யகூடிய யோகா ஆசனங்கள் நிறைய உள்ளன.
தினமும் யோகப் பயிற்சி மேற்கொள்வது, உங்களுடைய நீண்ட நாளுக்கான ஆற்றலை அளிக்கும். நம்முடைய பிசியான வேலை நேரத்துக்கிடையே, யோகா செய்வதற்காக நேரம் ஒதுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்வதால் உடல் இறுக்கமாக மாறும்.இதனால் முதுகுவலி, தசை பிடிப்பு, கழுத்து வலி, ஆகியவை ஏற்படும். எனவே, உங்கள் அலுவலகத்திலேயே, உங்கள் வொர்க்பிளேஸ் என்று சொல்லப்படும் நாற்காலியிலேயே 10 நிமிடங்கள் செய்யகூடிய யோகா ஆசனங்கள் நிறைய உள்ளன. இந்த பயிற்சிகள் உங்கள் தசை பிடிப்பு, தசை இறுக்கம், தோள்பட்டை வலி, கழுத்து வலி,முதுகு வலி ஆகியவற்றிலிருந்து நீக்கி ஆறுதல் தரும்.
சித்தாசனா :
இரண்டு கால்களையும் மடக்கி உட்கார்ந்து மிகவும் எளிமையாக செய்யக்கூடிய ஆசனம் இது. இந்த ஆசனம் செய்வதால், உங்கள் இடுப்புப் பகுதி மற்றும் தொடைகளில் உள்ள தசைகள் வலுவாகி, நெகிழ்வுத்தன்மையைப் பெறும். மனதை அமைதிப்படுத்தும்.இதற்கு முதலில் கால்களை மடக்கி அமருங்கள். இரண்டு கைகளையும் உங்கள் முட்டிகள் மீது வைத்து கொண்டு ரிலாக்ஸ் செய்யவும்.கண்களை மூடி, தியானம் செய்யுங்கள். 5 முதல் 10 நிமிடங்கள் வரை செய்யலாம்.
பிறை நிலா யோகாசனம் :
அமர்ந்தபடியே செய்யக்கூடிய யோகா ஆசனங்களில் ஒன்று பிறை நிலா யோகா. இந்த ஆசனம், உங்கள் கழுத்து, தோள் மற்றும் மேல் முதுகுப் பகுதியை தளர்த்தி, தசைகளை ரிலாக்ஸ் செய்து, வழியைக் குறைக்கிறது.இதற்கு முதலில் நாற்காலியில் அமரவும். மூச்சை உள்ளிழுக்கும் போது, கைகளை மேற்புறமாக தூக்கி, உடலை முன்புறமாக வளைக்கவும். மூச்சை வெளிவிடும் போது, கைகளை கீழே கொண்டு வந்து, உடலை நேராக்கவும். இதனை 10 முதல் 20 முறை வரை செய்யலாம். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
பின்புறமாக வளையும் யோகாசனம் :
இந்த ஆசனம் உங்கள் தோள், தண்டுவடம் மற்றும் முதுகை வலுப்படுத்தவும், வலியை நீக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தவும் உதவுகிறது.இந்த ஆசனம் செய்ய, இரண்டு பாதங்களையும் நன்றாக ஊன்றி நாற்காலியில் அமரவும். முதுகும், தண்டுவடமும் நேராக இருக்க வேண்டும். இப்போது முன்புறமாக குனிந்து, அதே நேரத்தில் உங்கள் கைகளை பின்புறமாக நீட்டிக்கவும். பின்னர் பின்புறமாக நீட்டப்பட்ட கைகள் உங்கள் நாற்காலியை பிடித்துக் கொள்ள வேண்டும். உங்கள் தோள்பட்டைகள் முதல் முதுகு வரை நன்றாக ஸ்ட்ரெட்ச் ஆவதை நீங்கள் உணர்வீர்கள்.
எண் நான்கு யோகா :
உங்களுக்கு நீண்ட காலமாக முதுகு வலி, தசை பிடிப்பு மற்றும் இறுக்கம் இருந்தால், இந்த ஆசனம் மிகவும் உதவியாக இருக்கும்.இதற்கு உங்கள் நாற்காலியில் நுனியில் நேராக அமரவும். உங்கள் தோள்பட்டையை முன்னும் பின்னுமாக சுழற்றி, ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். உங்கள் இடது கால் தரையில் நன்றாகப்படுமாறு அமர்ந்து கொள்ளுங்கள். வலது காலை தூக்கி, வலது காலின் குதிகால், இடது தொடையின் மீது இருக்குமாறு வைக்கவும். ஆழமாக, உங்கள் அடிவயிற்றிலிருந்து மூச்சை இழுத்து விடுங்கள். சில நிமிடங்கள் இந்த நிலையில் அமர்ந்து, கால்களை மாற்றி மறுபடி செய்யவும்.மன அழுத்தம் ஏற்படுவதற்கு உடல் சோர்வும் ஒரு காரணமாக இருக்கும். தினமும் 10 நிமிட யோகா ஆசனங்கள் செய்வது உங்கள் வலியை நீக்கி, உடலை தளரச் செய்து, அமைதியாக்கும்.