கிட்சனில் சமையல் செய்து கொண்டே உடற்பயிற்சி செய்யலாம்..

வளைந்து நெளிந்து, பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்களைக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால், வளைந்து நெளிந்து, பல்வேறு உடற்பயிற்சி உபகரணங்களைக் கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. கருவிகள் இல்லாதவர்களும், பயிற்சி செய்யக்கூடிய வசதி இல்லாதவர்களும் கூட டீ போடும் நேரத்தை உடற்பயிற்சி செய்யக்கூடிய களமாக மாற்றிக்கொள்ள முடியும். உங்களுடைய பிஸி ஷெட்யூலில் கிடைக்கும் நேரத்தில் வளைந்து நெளிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பயன்பட கூடிய பயிற்சிகளை இங்கே பார்க்கலாம்.

தோள்பட்டை பயிற்சி :

சுவற்றில் இருந்து இரு கைகளையும் நீட்டும் தொலைவில் நின்று கொள்ளுங்கள். இரண்டு அடி இடைவெளியில் கால்களை வைத்துக்கொண்டு, சுவற்றில் இரு கைகளையும் பொருத்திக்கொள்ளுங்கள். பின்னர், உடலை தரைக்கு இணையாக கீழ்நோக்கி வளையுங்கள். உங்களால் முடிந்தளவுக்கு வளைத்து பயிற்சி செய்யுங்கள். கை, கால், முதுகு என அனைத்து பகுதிகளுக்கும் உகந்த மிகச்சிறந்த பயிற்சியாக இருக்கும்.

ஒற்றைக் கால் பயிற்சி :

புறா போஸ் என பொதுவாக கூறப்படும் இந்த ஒற்றைக்கால் உடற்பயிற்சியும் செய்வது மிகவும் எளிதான ஒன்று. நேராக நிமிர்ந்து நின்று கொள்ளுங்கள். இடது காலை தரையில் ஊன்றிக்கொள்ளுங்கள். வலது கால் முழங்கால் இடுப்பு இணையாக இருக்குமாறு உயர்த்தி, பாதத்தை இடது கால் முழங்கால் மீது வைத்துக் கொள்ளுங்கள். கைகளை நேராக கூப்பி, முகத்தை இடதுபுறமாக திருப்பிக் கொள்ளுங்கள். இதே முறையை வலது காலை நிலத்தில் ஊன்றியவாறு செய்ய வேண்டும்.

பின்னோக்கி வளைதல் :

கிட்சனில் இருக்கும் அலமாரிக்கு அருகில் நின்றுகொள்ளுங்கள். இரு கால்களையும், உடலையும் நேராக வைத்துக் கொள்ளுங்கள். கைகள் இரண்டையும் கூப்பிக்கொண்டு, உங்களால் முடிந்தளவுக்கு பின்னோக்கி வளைந்து, மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். முதல் முறை செய்யும்போது தடுமாற்றமாக இருக்கும். ஆனால் எளிமையான பயிற்சி, முதுகு, தோல்பட்டை, தலைப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும்.

கோபுர நிலை :

இந்த பயிற்சி மேல் குறிப்பிட்டுள்ள பயிற்சியின் ஷார்ட் வெர்சன் எனக் கூறலாம். உடல் மற்றும் கால்களை நேராக வைத்துக் கொண்டு, இரு கைகளையும் கூப்பி மேலே உயர்த்திக்கொள்ளுங்கள். லேசாக உடலை பின்னோக்கி வளைத்து, முகத்தை மேலே உயர்த்தி கண்கள் மேல்புற சுவற்றை பார்க்க வேண்டும். இயல்பாக மூச்சுவிடுவதற்கு இந்த பயிற்சி உதவும். மேலே உயர்த்தும்போது காற்றை உள்ளிழுக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பும்போது காற்றை வெளியே விட வேண்டும்.

புஷ் அப்ஸ் :

கைகளை தரையில் ஊன்றி அல்லது உடற்பயிற்சி கூடங்களில் கருவிகளை பயன்படுத்தி புஷ் அப்ஸ் எடுப்பதை பார்த்திருப்போம். நாம் வீட்டில் இருக்கும் ஷோபாவைப் பயன்படுத்தி புஷ்அப்ஸ் எடுக்கலாம். இரு கைகளையும் ஷோபா மீது வைத்துக்கொண்டு, கால்களை தரையில் ஊன்றி புஷ் அப் எடுக்க வேண்டும். முகம் கீழ்நோக்கி பார்க்காமல், நேராக சுவற்றை பார்க்க வேண்டும். உங்களால் முடிந்தளவுக்கு புஷ் அப் எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.