சாதாரண நோயாக மாறிப்போன நீரிழிவு நோய்… கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள்!

பிராணாயாமா பயிற்சி செய்ய நீங்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே செலவிட்டால் போதும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், இதய நோய்களைத் தடுப்பதிலும் அவை நன்மை பயக்குகின்றன.

நீரிழிவு நோய் என்பது சர்வசாதாரண நோயாக மாறிவிட்டது. உலகெங்கிலும், ஏன் இந்தியாவிலும் கூட நீரிழிவு நோய் சாதாரண நோயாக மாறியுள்ளது. உண்மையில், டைப்-2 நீரிழிவு நோய் இப்போது தொற்றுநோய் (epidemic) வரையரைக்குள் வரும் அபாயத்தில் உள்ளது. ஒருவரின் வாழ்க்கை முறையை மாற்றியமைப்பது இந்த நோய்களின் சுமையை குறைக்க உதவும், குறிப்பாக நீரிழிவு நோய் போன்ற நோய்களின் சுமையைக் குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம் தவறான உணவு மற்றும் மோசமான வாழ்க்கை முறை என கூறப்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 25 வயதிற்குட்பட்ட 4 பேரில் ஒருவருக்கு இந்த டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது எனவும் கூறப்படுகிறது. சரி, பொதுவாக நீரிழிவு நோயக் கட்டுப்படுத்த சில யோகாசனங்கள் பெரிதும் உதவுகின்றன. அவை குறித்து பார்ப்போம்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் யோகாசனங்கள்:

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகள், கீரை, காய்கறிகள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது நீரிழிவு நோயைத் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் தடுப்பதிலும் பெரும் பங்காற்றும். பிற வாழ்க்கை முறை மாற்றங்கள், குறிப்பாக, யோகா, பிராணாயாமா மற்றும் தியானம் ஆகியவை நன்கு அறியப்படாதவை. ஆனால் அதில் இருக்கும் பலன்கள் ஏராளம். டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் பிரச்சனைகளுள் ஒன்று, மன அழுத்தம். ‘மன அழுத்தம் தூண்டப்பட்ட நீரிழிவு’ நோய் என்று ஒரு பகுதியும் உண்டு.மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவை நீரிழிவு நோயுடன் தொடர்புடையவை என்பது அனைவரும் அறிந்ததே. உண்மையில், மனச்சோர்வு என்பது நீரிழிவு நோயுடன் தொடர்புடைய ஒன்றாகும். இதனால், மனச்சோர்வு நீரிழிவு நோயையும், மன அழுத்தத்தையும் உருவாக்கும். இதிலிருந்து விடுபட யோகா, பிராணாயாமா மற்றும் தியானம் பெரும் பங்கு வகிக்கின்றன. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் உதவும் குறிப்பிட்ட யோகாசனங்கள் உள்ளன. ஆழ்ந்த சுவாச முறை மற்றும் தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முறையான யோகாசனங்கள்- பிராணாயாமா மற்றும் தியானத்தின் நன்மைகள் நிறைய உள்ளன. ஒருவர் பிராணாயாமா செய்யும்போது, அது ஒருவித தளர்வு நிலையை அளிக்கின்றது. தசைகளில், குறிப்பாக கழுத்து மற்றும் தோள்களில் இருக்கும் அழுத்தத்தை குறைத்து, ஒருவரை நிதானமாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுகிறது. ஆழ்ந்த சுவாசத்தையும் தியானத்தையும் செய்யும்போது ‘எண்டோர்பின்ஸ்’ எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளிப்படுகின்றன. பிராணாயாமா மற்றும் தியானத்தை தவறாமல் பயிற்சி செய்யும்போது, இன்சுலின் செயல்பாட்டைத் தடுக்கும் அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் அளவு குறைகிறது. இது நீரிழிவு நோயை எளிதாக கட்டுப்படுத்த உதவுகிறது.

பிராணாயாமம்- செய்வது எப்படி?

தரை அல்லது யோகா மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு உங்கள் கட்டைவிரலால் உங்கள் வலது பக்க மூக்கு துவாரத்தை மூடிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் இடது பக்க மூக்கின் வழியே மூச்சை இழுக்கவும். உங்கள் முதுகை நேராகவும், உடல் தளர்வாகவும், இடது கையை உங்கள் இடது முழங்காலில் வைத்திருங்கள். அடுத்து வலது கையின் மோதிர விரலால் உங்கள் இடது பக்க மூக்கை மூடுங்கள். பின்னர் வலது மூக்கிலிருந்து மூச்சை வெளியே விடுங்கள். 15 நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் இதே போன்று செய்யவும். தேவைப்பட்டால், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.

பிராணாயாமா பயிற்சி செய்ய நீங்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் வரை மட்டுமே செலவிட்டால் போதும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், இதய நோய்களைத் தடுப்பதிலும் அவை நன்மை பயக்குகின்றன. மேலும், விரைவில் நீங்கள் உங்களை அமைதியும், மன அழுத்தம் இல்லாதவராகவும் காண முடியும். எனவே, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நீரிழிவு நோயாளிகள் அனைவரும் பிராணாயாமா போன்ற யோகாசனங்களை கடைப்பிடித்து அதை அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். அவற்றை பயிற்சி செய்து உங்கள் உடலிலும் மனதிலும் நன்மை பயக்கும் விளைவுகளை நிச்சயம் உங்களால் உணர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE