நீரிழிவு நோய் முதல் உயர் இரத்த அழுத்தம் வரை- பல நோய்களுக்கு இயற்கை மருந்தாக திகழும் பிராணாயாமா!

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பிராணாயாமா சிறந்த பயிற்சி ஆகும்.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகாவின் பெருமை உலக மக்கள் அனைவரையும் சென்றடையும் வகையில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. யோக கலையில் முக்கியமான பயிற்சிகளில் ஒன்றாக இருப்பது மூச்சுப்பயிற்சி. இதில் பிராணாயாமா சுவாச பயிற்சியானது நம் உடலின் ஒவ்வொரு உயிரணுவிற்கும் ஆற்றலை கொடுக்கும் சக்தி உடையது. பிராணாயாமா என்பதன் பொருள் உயிர் சக்தி அல்லது நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க செய்யும் சுவாச முறையாகும்.

எளிமையான பயிற்சியாக இருக்கும் பிராணாயாமாவை நாள்தோறும் பயிற்சி செய்தால் உடலுக்கும், மனதிற்குக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். சரியான சுவாச பயிற்சியை உள்ளடக்கியதே பிராணாயாமா. இந்த யோகா பயிற்சியை முறையாக செய்து சரியாக சுவாசிப்பதன் மூலம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் புதிய ஆக்சிஜன் சென்றடைகிறது. நம் சுவாசத்தோடு தொடர்புடைய முக்கிய சக்தியான பிராண சக்தியைத் அதிகரித்து, நெறிப்படுத்துகிறது பிராணாயாமா.

பிராணாயாமம்- செய்வது எப்படி?

 

தரை அல்லது யோகா மேட்டில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு உங்கள் கட்டைவிரலால் உங்கள் வலது பக்க மூக்கு துவாரத்தை மூடிக் கொள்ளுங்கள். இப்போது உங்கள் இடது பக்க மூக்கின் வழியே மூச்சை இழுக்கவும். உங்கள் முதுகை நேராகவும், உடல் தளர்வாகவும், இடது கையை உங்கள் இடது முழங்காலில் வைத்திருங்கள். அடுத்து வலது கையின் மோதிர விரலால் உங்கள் இடது பக்க மூக்கை மூடுங்கள். பின்னர் வலது மூக்கிலிருந்து மூச்சை வெளியே விடுங்கள். 15 நிமிடங்களுக்கு மீண்டும் மீண்டும் இதே போன்று செய்யவும். தேவைப்பட்டால், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளலாம்.

பிராணாயாமாவை தினமும் தவறாமல் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

நம் உடலில் இருக்கும் சுமார் 80,000 நரம்புகளை சுத்திகரிக்கிறது பிராணாயாமா. இது நம் உடலின் ஆற்றல் ஓட்டத்தை சமன் செய்து, நமது ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிசெய்கிறது . தினசரி பிராணாயாமா பயிற்சி செய்து வந்தால் மன ஆரோக்கியம் மற்றும் நோயற்ற உடலை பெற முடியும்.
பிராணாயாமாவை தினமும் செய்து வந்தால் எல்லா உறுப்புகளையும் ஆக்சிஜன் சென்றடைய உதவும். இதனால் செரிமான அமைப்பு சமநிலையாகிறது. உங்கள் சருமம் இயற்கையான பிரகாசத்தை அடைகிறது. ஒரு நபரின் உயிர்ச்சக்தியை அதிகரிப்பதில் பிராணாயாமா முக்கிய பங்கு வகிக்கிறது.

செறிவு, நினைவாற்றல் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து மன ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது பிராணாயாமா. இந்த மூச்சு பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதால் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் அதிகரித்து மன நரம்புகளுக்கு அமைதி கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.

உயர் ரத்த அழுத்த பிரச்சனை கொண்டவர்களுக்கு பிராணாயாமா சிறந்த பலனை தருகிறது. பிராணாயாமா ஒரு தியான நிலை என்பதால், அது உடலை அமைதிப்படுத்தி உடலை முழுமையாக ரிலாக்ஸாக வைக்க தேவையான ஹார்மோன்களை வெளியிடுகிறது. ரத்த அழுத்தத்துடன், நீரிழிவு நோய், மனச்சோர்வு போன்ற கடும் பிரச்சனைகளுக்கும் சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது பிராணாயாமா.
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பிராணாயாமா சிறந்த பயிற்சி ஆகும். ஒருவர் தவறாமல் பிராணாயாமா பயிற்சியை செய்ய துவங்கும் போது, உடலில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் நீங்குகிறது. பல உணவுகளை ருசிக்க வேண்டும் என்ற ஏக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிராணாயாமா சுவாச பயிற்சியானது உணவைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்கிறது.

நம்மில் பலருக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது நாம் எப்படி சுவாசிக்க வேண்டும் என்பது தெரியாமலேயே தினமும் சுவாசித்து கொண்டிருப்பதுதான். முயன்ற சுவாச பயிற்சியாக இருக்கும் பிராணாயாமாவை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு நபரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. “நீண்ட ஆயுள் சுவாச வீதத்தைப் பொறுத்தது” என்ற யோக தத்துவத்தின்படி, பிராணாயாமா ஒரு நபருக்கு முறையாக சுவாசிக்க உதவி நீண்ட ஆயுளையும் தருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE