உக்ரைனின் மரியுபோல் நகரில், முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும் கலாசார மைய அரங்கில், ஏவுகணைகளை வீசி ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், நுாற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்பியது. அது தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என கருதிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் திகதி, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.
தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள், பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டும், ரஷ்ய படையினரின் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், துறைமுக நகரமான மரியுபோலில் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கத்தின் மீது, ரஷ்ய ராணுவத்தினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அந்த அரங்க வளாகம் இடிந்து தரைமட்டமானது. மூன்று மாடிகளை உடைய இந்த அரங்கில் நுாற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்தது தெரியவந்துள்ளது.