சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்ட ஊடக அறிக்கை

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 38.1 (ஆ) பிரிவுக்கு அமைய அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜக்பக்ஷவினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இராஜினாமாக் கடிதம் எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய, 2022 ஜூலை 14 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தனது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய தற்பொழுது முதல் புதிய ஜனாதிபதியை நியமிக்கும் அரசியலமைப்பு செயன்முறை நடைமுறைக்கு வரும். அந்த செயன்முறை நிறைவுறும் வரை ஜனாதிபதி பதவியின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளை பிரயோகிப்பதற்கும், புரிவதற்கும் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.

என்னால் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது போன்று புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது, 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய மற்றும் அரசியலமைப்பின் 40 வது பிரிவுக்கு அமைய இடம்பெறும்.இந்த செயன்முறையை மிகவிரைவில் வெற்றிகரமாக நிறைவேற்றுவது எனது நோக்கமாகும். தெற்காசியாவின் பழைமையான ஜனநாயக நாடாக பெருமைப்படும் எமது நாட்டில் இந்த செயன்முறை முழுமையான ஜனநாயகக் கட்டமைப்பிலும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்வது எமது நாட்டுக்கு மாத்திரமல்லாமல் உலக அரசியல் வரலாற்றிலும் முக்கியமான வரலாற்று நிகழ்வாக அமையும்.

அதனால், இந்த ஜனநாயக செயற்பாட்டுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன். உரிய ஜனநாயக பாராளுமன்ற முறைமையை செயற்படுத்துவதற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களுக்கும் சுயாதீனமாக தமது மனச்சாட்சிப்படி செயற்படுவதற்கும் அமர்வில் கலந்துகொள்வதற்கும் பொருத்தமான அமைதியான சூழலை ஏற்படுத்தித் தருமாறு விசேடமாக எமது நாட்டின் அன்பான மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறான அமைதியான சூழ்நிலையில் பொறுப்புவாய்ந்தவர்களின் ஆதரவுடன் ஏழு குறுகிய நாட்களுக்குள் இந்த செயன்முறையை நிறைவு செய்வதற்கு நான் எதிர்பார்க்கின்றேன். அதற்கமைய இம்மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை (2022.07.16) பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் அனைத்து உறுப்பினர்களையும் இதில் கலந்துகொள்ளுமாறு இத்தால் அறிவிக்கின்றேன்.

இதற்காக நீங்கள் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி.

மஹிந்த யாப்பா அபேவர்தன
சபாநாயகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE