ரணில் தான் நினைத்ததுபோல பிரதமர் பதவியிலிருந்து விலக முடியாது!

அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக முடியாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

நாடு தற்போதுள்ள நிலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமின்றி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி பதவி விலகும் பட்சத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் பொது மக்கள் பிரதமரையும் பதவி விலகக் கோருவதனால் மிகக்குறுகிய காலத்திற்கு சபநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமித்து, அதன் பின்னர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை விருப்பினைக் கொண்ட ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க முடியும் என்ற மாற்று யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம் கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டமைக்கமைய தானும் பதவி விலகத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருக்கின்றார். இந்நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதோடு ‘அரசியலமைப்பில் அவ்வாறானதொரு சரத்து இல்லை என தெரிவித்த அவர், பிரதமருக்கு அவ்வாறு பதவி விலக முடியாது என்றும் கூறினார். எனவே அரசியலமைப்பிற்கு அமையவே செயற்பட வேண்டும். மாறாக பிரதமரை பதவி விலகுமாறு கோருவதானது , அரசியலமைப்பை மீறி செயற்படுமாறு வலியுறுத்துவதைப் போன்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிடுகின்றமை கவலைக்குரியது என தெரிவித்த வஜிர அபேவர்தன, அரசியலமைப்பின் 37 ஆவது சரத்தில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதாவது , நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படும் போது , மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காக 37 (1) , 37 (2) ஆகிய சரத்துக்களில் இவ்விடயம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை பாகிஸ்தான் , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இந்த சரத்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன, அவ்வாறிருக்கையில் இலங்கையில் மாத்திரம் ஏன் பயன்படுத்த முடியாது? எனவும் கேள்வி எழுப்பினார்.

எனவே ஜனாதிபதி பதவி விலகும் பட்சத்தில் தொடர்ந்தும் அரசாங்கத்தைக் கொண்டு செல்வதில் எவ்வித சிக்கலும் கிடையாது என்றும் வஜிர அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE