ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது, அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறுவது ஆகாது என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர், ஆனால், வரலாறு எழுதப்படும் போது எந்த பக்கம் இருக்கிறோம் என்பது முக்கியம் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே மோதலில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. சம்பந்தப்பட்ட இரு நாடுகளும் பிரச்சினைகளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, இந்தியா வாக்களிக்கவில்லை.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை மலிவு விலையில் வாங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது: ரஷ்யாவிற்கு எதிராக நாங்கள் விதித்த பொருளாதார தடைகளை மதித்து நடக்க வேண்டும் என்பதே உலக நாடுகளுக்கு எங்களின் வேண்டுகோள்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவது என்பது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை மீறுவது ஆகாது என நம்புகிறேன். ஆனால், வரலாறு எழுதப்படும் இந்த தருணத்தில், ஒவ்வொருவரும் எந்த பக்கத்தில் நிற்கிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டியது அவசியம். ரஷ்ய தலைமையை ஆதரித்தால், அது உக்ரைன் மீதான படையெடுப்பை ஆதரித்ததாகவே கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.