37,000 அடி உயரத்தில் பறந்த விமானத்தில் தூங்கிய விமானிகள்

சூடானில், 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் விமானிகள் துாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வட ஆப்பிரிக்க நாடான சூடானின் கார்ட்டூமில் நகரில் இருந்து எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சமீபத்தில் போயிங் 737 ரக விமானம் சென்றது.அது அடிஸ் அபாபாவை நெருங்கிய போது விமான நிலைய அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை.

விமானம் தரையிறங்க வேண்டிய நேரம் நெருங்கியும் விமானிகளிடமிருந்து பதிலில்லை. இதையடுத்து, அவசரகால அபாய எச்சரிக்கையை விமான நிலைய அதிகாரிகள் அனுப்பினர்.

அப்போதுதான், ஆழ்ந்த துாக்கத்தில் இருந்த விமானிகள் இருவரும் கண்விழித்தது தெரிய வந்ததது.அதுவரையிலும் தானியங்கி முறையில் இயங்கிய விமானம், அதன் பிறகு விமானிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து விமானம் 25 நிமிடம் தாமதமாக தரையிறங்கியது.

இதில் பயணியர் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.அதிக வேலைப்பளு காரணமாக, விமானிகள் சோர்வில் இருந்ததால் துாங்கியதாக கூறப்படும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.