கூகுள் தேடல் தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டில் மேற்படிப்புக்கு தகுதியான நாடுகளில் ஒன்றாக கனடா உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
Remitly என்ற பண பரிமாற்ற வர்த்தக நிறுவனம் முன்னெடுத்த ஆய்வில், கொலம்பியா முதல் இந்தியா வரையிலான 36 நாடுகளில், வெளிநாட்டில் படிப்பதற்காக அதிகம் தேடப்பட்ட இடமாக கனடா உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இந்த வரிசையில் இரண்டாவது இடத்தை ஸ்பெயின் கைப்பற்றியுள்ளது. 13 நாடுகளில் அதிகம் தேடப்பட்ட இடமாக ஸ்பெயின் உள்ளது, அதைத் தொடர்ந்து,10 நாடுகளில் அதிகம் தேடப்பட்ட இடமாக பிரித்தானியா உள்ளது.ஆனால், இதற்கு நேர்மாறாக கனடா மாணவர்களால் அதிகம் தேடப்பட்ட இடமாக பிரான்ஸ் இருப்பதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகில் மாணவர்களால் அதிகம் தேடப்பட்ட 2,000 பல்கலைக்கழகங்களில், கனடாவில் அதிகம் தேடப்பட்ட பல்கலைக்கழகமாக ரொறன்ரோ பல்கலைக்கழகம் கண்டறியப்பட்டது.
மட்டுமின்றி உலகளாவிய தேடலில் ரொறன்ரோ பல்கலைக்கழகம் 7-வது இடத்தைப் பிடித்தது. குறித்த பட்டியலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் முதலிடத்திலும், UCLA மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.மேலும், கொரோனா பரவலுக்கு முன்னர், கனடாவில் சர்வதேச மாணவர் சேர்க்கை என்பது 10 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னர் வெறும் 100,968 என இருந்த வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கை, 2018-2019 கல்வியாண்டில் post-secondary கல்வி நிறுவனங்களில் 313,395 என்ற எண்ணிக்கையில் சர்வதேச மாணவர்கள் பதிவாகியிருந்தனர்.
மட்டுமின்றி, சர்வதேச மாணவர்களிடம் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்கள் செயல்பாட்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு சர்வதேச கல்விக் கட்டண வருவாயை அதிகளவில் நம்பியுள்ளன.
கொரோனா பரவலுக்கு முன்னர், கணிதம், கணினி மற்றும் தகவல் அறிவியலுக்கான துறைகளில் சர்வதேச மாணவர்களின் சேர்க்கை 374 சதவீதம் அதிகரித்திருந்தது, மட்டுமின்றி போக்குவரத்துத் துறை தொடர்பான துறைகளில் சேரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய ஏழு மடங்கு அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.