கோவேக்சின் தடுப்பூசி சோதனை நடத்திய கதை: சுவாரசியமான தகவல்கள்..!

கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியபோது, குரங்குகளை பிடித்து வந்து சோதனை நடத்திய சுவாரசிய தகவல்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா எழுதிய புதிய புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

உலக மக்கள்தொகையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியபோது, இவ்வளவு மக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசிக்கு எங்கே போவது என்ற கேள்வி உலகமெங்கும் எழுந்தது.

ஆனால் உள்நாட்டில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கி சாதித்தது. இதன் சாதனைப்பயணம் பல கடிமான பாதைகளைக் கடந்து வந்துள்ளது.

இந்த அனுபவங்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா, ‘கோயிங் வைரல்: மேக்கிங் ஆப் கோவேக்சின்- தி இன்சைடு ஸ்டோரி’ என்ற தலைப்பில் புதிய புத்தகமாக எழுதி உள்ளார்.

அதில் விஞ்ஞானிகள் சந்தித்த அறிவியல் நுட்பங்கள், சவால்கள், ஆய்வக வலையமைப்பு, நோய்க்குறி அறிதல், சிகிச்சை, செரோ சர்வேக்கள், புதிய தொழில்நுட்பங்கள் என பல விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளன.

கோவேக்சின் தடுப்பூசியின் வெற்றி நாயகர்கள் என்று சொன்னால், மனிதர்கள் மட்டுமல்ல, 20 குரங்குகளும் அடங்கும் என்று டாக்டர் பலராம் பார்கவா சொல்கிறார். இதுபற்றி அவர் புத்தகத்தில் எழுதி இருப்பதாவது:-

கோவேக்சின் தடுப்பூசியின் வெற்றிக்கதை நாயகர்கள் மனிதர்கள் மட்டுமல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு உயிர் காக்கிற இந்த தடுப்பூசியை கோடிக்கணக்கானோர் பெற்றுக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு 20 குரங்குகளும்கூட பொறுப்பு ஆகின்றன.

இந்த தடுப்பூசி சிறிய அளவிலான விலங்குகளிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்று நாங்கள் தெரிந்து கொண்டோம். அடுத்து, மனிதர்களுடன் ஒப்பிடுகிறபோது, அதே போன்ற உடல் அமைப்பு, நோய் எதிர்ப்பு அமைப்புகளை கொண்டுள்ள குரங்குகள் போன்ற பெரிய விலங்குகளிடம் சோதிக்க வேண்டிய கட்டம் வந்தது.மருத்துவ ஆராய்ச்சியில் உலக அளவில் செம்முக குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இந்திய ஆய்வகங்களில் அவற்றை செயற்கை முறையில் உருவாக்குவதில்லை என்கிறபோது, அந்த குரங்குகளுக்கு எங்கே போவது?

பல்வேறு உயிரியல் பூங்காக்கள், நிறுவனங்களை தொடர்பு கொண்டு விசாரித்தாயிற்று. தேசிய வைராலஜி நிறுவனத்தில் இருந்த 2 குரங்குகள் வயதானவை என்பதால் அவை ஆராய்ச்சிக்கு ஏற்றவை அல்ல என்பதால் அதிலும் சிக்கல்கள் வந்தன. ஆராய்ச்சியாளர்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய இளம் குரங்குகள்தான் வேண்டும்.

இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுமிக்க ஒரு குழுவினர் மராட்டியத்துக்கு சென்றனர். ஆனால் தொடர் முடக்கம் காரணமாக அங்கும் இந்த வகை குரங்குகள், ஊருக்குள் உணவு கிடைக்காத காரணத்தால் அடர்ந்த காடுகளுக்குள் சென்று விட்டது தெரிய வந்தது. பின்னர் மராட்டிய வனத்துறை உதவியுடன் அவற்றை நாக்பூர் அருகே கண்டறிந்தோம்.

அடுத்த சிக்கல், பிடித்து வந்த அந்த விலங்குகளை சோதனைக்கு முன்னர் அவற்றுக்கு கொரோனா வராமல் பாதுகாப்பதில் சவால்கள் வந்தன. ஏனெனில் அவற்றுக்கு பராமரிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகளிடம் இருந்து கொரோனா தாக்கி விடலாம்.

எனவே அவர்கள் அனைவருக்கும் வாரம் 2 முறை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியதாயிற்று. கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற செய்ய வேண்டியதாயிற்று.

இப்படியாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையெல்லாம் மேற்கொண்டு, குரங்குகளை கொண்டு கோவேக்சின் தடுப்பூசி சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்தோம். இந்த குரங்குகளும் பாராட்டுக்குரியவை” என்று அவர் அந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.