“கோவிட் நிச்சயமற்ற தன்மை” காரணமாக புத்தாண்டு தினத்தன்று லண்டனில் உள்ள தேம்ஸ் நதிக்கரையில் நடைபெறும் கண்கவர் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் இம்முறையும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது, எவ்வாறாயினும், Trafalgar சதுக்கத்தில் ஒரு தனி நிகழ்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூலை முதல் பெரிய அளவிலான நிகழ்வுகள் கட்டுப்பாடுகள் இல்லாமல் நடத்துவதற்கு முடிந்தாலும், குளிர்காலத்தில் கோவிட் நிலைமை குறித்து எச்சரிக்கை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இந்த ஆண்டும் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் ஜனவரி முழுவதும் பிரித்தானியாவில் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் அமுலில் இருந்ததால், பொதுவாக 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தற்போது கோவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு குறித்த நிகழ்வு நடைபெறாது என லண்டன் மேயர் சாதிக் கானின் செய்தித் தொடர்பாளர் இன்று உறுதிப்படுத்தினார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, இந்த ஆண்டு உலகப் புகழ்பெற்ற புத்தாண்டு கண்கவர் வானவேடிக்கை கொண்டாட்டங்கள் தேம்ஸ் கரையில் நடத்தப்படாது. “கடந்த ஆண்டு வெற்றிகரமான நிகழ்ச்சி தொற்றுநோய் காரணமாக சற்று வித்தியாசமான முறையில் நடந்தது, இந்த ஆண்டு லண்டனில் எங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல அற்புதமான புதிய விருப்பங்கள் கருதப்படுகின்றன.”