பிரேசிலில் பயங்கர சூறாவளி காரணமாக, ஒரு வாரமாக பெய்து வரும் கனமழைக்கு, 41 பேர் பலியான நிலையில், மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலை, சில தினங்களுக்கு முன் சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால், சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் தென் மாகாணங்களான ரியோ கிராண்டோ சுல், சான்டா கத்ரினா ஆகியவற்றின் கடற்கரை நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மியூகம், லஜியாடோ, ரோகா சேல்ஸ், வெனான்சியோ அயர்ஸ் உட்பட, 65க்கும் மேற்பட்ட நகரங்கள் புயலின் கோரத்தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகின. ஏராளமான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் அதிகனமழைக்கு, இதுவரை 41 பேர் பலியாகியுள்ளதாக பிரேசில் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 223 பேர் காயமடைந்துள்ள நிலையில், 11,000க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பயங்கர சூறாவளியில் சிக்கி, 50 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
ரியோ கிராண்டோ சுல் மாகாணத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் சேதமடைந்துள்ளதால் மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து அம்மாகாண கவர்னர் எட்வார்டோ லைட் கூறுகையில், “கனமழையால் மாகாணத்தின் முக்கிய அடையாளங்கள் அழிந்துள்ளன. உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 166 கோடி ரூபாய் செலவாகும்,” என தெரிவித்துள்ளார்.