7 கோடி அமெரிக்க டொலர்கள் அல்லது 2500 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் இல்லாத காரணத்தினால் 99,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் ஒன்று 20 நாட்களாக கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அதிகாரியொருவர், இன்று (10) தெரிவித்தார்.
கப்பல் நங்கூரமிட்ட ஒரு நாளைக்கு, தாமதக் கட்டணமாக ஒன்றரை இலட்சம் டொலர்கள் செலுத்த வேண்டும் என்று கூறிய அதிகாரி, அதன்படி கப்பல் தாமதக் கட்டணமாக 30 லட்சம் டொலர்கள் அதாவது 110 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்.
கோரல் எனர்ஜி நிறுவனத்திடம் இருந்து முற்பதிவு செய்யப்பட்ட மசகு எண்ணெய் அடங்கிய இந்தக் கப்பல் செப்டம்பர் 20 ஆம் திகதி இலங்கை வந்தடைந்ததாகவும், அதனை விடுவிப்பது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் திறைசேரியுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
குறித்த மசகு எண்ணெய் தரமற்றது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதுடன், இதுபோன்ற மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எரிசக்தி துறையில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.