வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்திருந்தால் தமிழர்கள் சிறுபான்மைப்படுத்தப்படுவோம் எனவே தமிழினத்தின் இருப்பை தக்கவைப்பதற்கு தமிழர்களின் இனப் பெருக்கம் அதிகரிக்க வேண்டும் என தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செங்கலடி செல்லம் பிறிமியர் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கிழக்கு தமிழர்களின் சமகாலமும் எதிர்காலமும் கருத்தாடல்களம் எனும் தொனிப் பொருளில் தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந் நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் தெரிவிக்கையில்,
“கிழக்கு தமிழரின் எதிர்காலத்தை சமகாலம் எப்படி தீர்மானிக்க போகின்றது என்பதையும் அரசியலையும் தவிர்த்து, தமிழர்களே தமிழர்களாக ஒன்றினைவோம் என்று இதனை ஆரம்பித்துள்ளோம்.
இதற்கு முன்பு நாங்கள் என்ன செய்தோம் சரியாக செய்தோமா? பிழையாக செய்தோமா? என்று விவாதித்துக் கொண்டால், தந்தை செல்வநாயகம் தொடக்கம் தலைவர் பிரபாகரன் வரை யாரின் தவறு என்று இன்று பட்டிமன்றம் போட்டு நடத்த வேண்டும்.
எனவே கிழக்கு தமிழர்களின் எதிர்காலத்தை எப்படி காப்பாற்ற போகின்றோம் என்பதே இன்றைய தொனிப்பொருள்.
வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமும் வேண்டுதலாகவும் இருந்தும் துரஷ்டவசமாக வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்துள்ளது.
வடக்கும் கிழக்கும் பிரிந்திருந்தால் கிழக்கு தமிழர்களின் நிலை என்னவென்று சிந்திக்க தூண்டுவதே இந்த கருத்தாடல் களத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.
வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கும் வேளையிலே காணி பொலிஸ் அதிகாரங்கள் கூட தமிழர்களுக்கு சாத்தியமற்றது. அதேநேரத்திலே வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்திருந்தால் தமிழர்கள் நாங்கள் சிறுபான்மைபடுத்தப்படுவோம் என்பதில் எள்ளவும் சந்தேகம் கிடையாது. வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்திருப்பது எங்கள் விருப்பமல்ல.
எங்களுடைய இருப்பை நாங்கள் தக்கவைக்க வேண்டுமாக இருந்தால் எம்முடைய இனம் பெருக வேண்டும்.
இன்று ஒவ்வொரு நீதிமன்றத்தில் நடக்கின்ற வழக்கை பார்த்தால் அங்கு பாதி வழக்கு விவாகரத்தாக இருக்கின்றது எனவே இவ்வாறு சென்றால் எமது சந்ததியின் நிலை என்னவென்று சிந்தித்து பாருங்கள்.
எனவே தமிழர்களின் இருப்பை பாதுகாப்பதற்கு அரசியல் கடந்து அரசியல் கட்சிகள். புத்திஜீவிகள், மற்றும் தமிழர்கள் ஆனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் கோரிக்கை விடுக்கின்றேன்.”என கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன்,எஸ்.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், பா.அரியேந்திரன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் அருண்தம்பிமுத்து, ஜே.வி.பி. கட்சி அமைப்பாளர் நாதன், மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கலந்து கொண்டுள்ளனர்.