நிலவுக்கு மனிதனை அனுப்பும், ‘நாசா’வின் புதிய திட்டமான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தின் முதல் சோதனை முயற்சி, இயந்திர கோளாறு காரணமாக நேற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா 1969ல் முதன்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. இந்நிலையில், மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான, ‘ஆர்டெமிஸ்’ திட்டத்தை நாசா துவங்கியது. அது, 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட சோதனை முயற்சியாக, ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. இந்த ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சிக்கான, ‘ஓரியன்’ விண்கலத்தை சுமந்து செல்கிறது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் இந்திய நேரப்படி நேற்று மாலை 6:00 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. இதைக் காண அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் வந்தனர். கடைசி நிமிடத்தில், இயந்திரத்தில் எரிபொருள் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராக்கெட் ஏவுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
செப்., 2 அல்லது 5ம் தேதி ராக்கெட் மீண்டும் ஏவப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்டெமிஸ் – 1 விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லாது; நிலவில் இறங்காது. ஆனால் சோதனை முயற்சியாக பொம்மைகளை ஏற்றிச் சென்று பூமிக்கு திரும்பும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 97 கி.மீ., அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்கவிட நாசா திட்டமிட்டுள்ளது.