வீஜே அர்ச்சனாவுக்கு பதில் புது அர்ச்சனா!

விஜய் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி வரும் சீரியல் ‘ராஜா ராணி -2’. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தி வருபவர் நடிகை அர்ச்சனா. விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியிலும் கூட சிறந்த வில்லி நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் கதாநாயகி ஆல்யா மானசா பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகிய பின்னரும் கூட, அர்ச்சனாவின் நடிப்பிற்காகவே இளைஞர்கள் பலரும் தொடரின் ரசிகர்களாக இருந்து வந்தனர். சில தினங்களுக்கு முன் அர்ச்சனா ‘ராஜா ராணி-2’ சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால், அதன்பிறகும் அவர் நடித்த எபிசோடுகள் தொடர்ந்து சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்ததால் அவர் விலகவில்லை என ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

ஆனால், தற்போது அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும் விரைவில் புதிய புராஜெக்ட்டில் சந்திக்கிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அதேசமயம் ‘ராஜா ராணி-2’ தொடரின் வில்லி கதாபாத்திரத்தில் இனி அர்ச்சனாவுக்கு பதிலாக அர்ச்சனா குமார் நடிக்க உள்ளார். அர்ச்சனா குமார் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ என்கிற நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். ‘பொன் மகள் வந்தாள்’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார். பழைய அர்ச்சனாவின் இடத்தை புது அர்ச்சனா நிரப்புவரா என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published.