
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்புவார் எனவும் நாடு திரும்பும் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அடுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக நாங்கள் கட்சி என்ற வகையில் கடந்த வாரம் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
முதலாவது விடயமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவது சம்பந்தமாக பேசினோம். கூடிய விரைவில் அவர் நாடு திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு நாங்கள் கோரினோம்.
இலங்கை திரும்பிய பின்னர் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்குமாறும் கோரினோம். இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும்.
ஜனாதிபதியிடம் இருந்து இந்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைத்தது. விரைவில் முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இலங்கை திரும்புவார்.
இரண்டாவதாக அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்த போகின்றனர் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த எதிர்த்தரப்பினர் முயற்சித்து வருகின்றனர்.
இதனால், அரச நிறுவனங்கள் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் திட்டங்கள் இருக்குமாயின் அது சம்பந்தமாக முதலில் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு தெளிவுப்படுத்தி, நாடாளுமன்றத்திற்கும் அறிவித்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமாறும் அப்படியில்லாமல் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டோம்.
எந்த ஒரு அரச நிறுவனத்திலாவது மறுசீரமைப்பான மாற்றங்களை ஏற்படுத்தும் தேவை இருந்தால், முதலில் தொழிற்சங்கங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்குஅறிவித்து, அவர்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளாமல் மேற்கொள்ள போவதில்லை என்ற விடயத்திற்கு இணங்கினார்.
மேலும் விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்குவது சம்பந்தமாகவும் ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம். தேவையான அனைத்து உரங்களை இறக்குமதி செய்து வழங்கவும் சில பயிர்களுக்கு உர மானியத்தை வழங்குவது தொடர்பாகவும் இணக்கப்பாட்டுக்கு வந்தோம்.
ஜனாதிபதியுடனான இந்த பேச்சுவார்த்தை சாதமான பதில்கள் கிடைத்தன. கட்சி என்ற வகையில் நாங்கள் அது தொடர்பில் திருப்தியடைகின்றோம் எனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.