பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கடந்த 17 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் சட்டவிரோதமாக கைது செய்தல், தடுத்து வைத்தல், சித்திரவதைக்குள்ளாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்கு வழி சமைப்பதாக எடுத்துக்கூறியுள்ள முறைப்பாட்டாளர், கடந்த 22 ஆம் திகதி காலி முகத்திடலில் ஆயுதமேந்திய படையினர் செயற்பட்ட விதம் அதற்கான எடுத்துக்காட்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய, ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால கட்டளைகள் அடங்கிய வர்த்தமானியை இடைநிறுத்துவதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த சட்டத்தினூடாக ஜனாதிபதி அல்லது ஜனாதிபதியின் அதிகாரங்களை ஏற்கும் அதிகாரியால் மேலதிக கட்டளைகள் பிறப்பிக்கப்படுவதை தடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.