இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ளதை அடுத்து, பெட்ரோல் – டீசல் விலையை அரசு மூன்றாவது முறையாக உயர்த்தியுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கையில் பெட்ரோல் – டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை, பெட்ரோல் – டீசல் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டன. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று விலை உயர்த்தப்பட்டது. இலங்கை ரூபாய் மதிப்பில் பெட்ரோல், லிட்டருக்கு 50 ரூபாயும், டீசல் 60 ரூபாயும் உயர்த்தப்பட்டன.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாய்க்கும், டீசல் 460 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இலங்கைக்கு இந்த வாரமும், அடுத்த வாரமும் வந்துசேர வேண்டிய பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் வரவு பல்வேறு காரணங்களால் தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து, ‘பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டும் எரிபொருள் வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்’ என, அரசு அறிவித்துள்ளது.