
இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இச் சந்திப்பின் போது, தூதுவர் ஜென்ஹோங் இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்து விளக்கியதுடன், இருதரப்பு ஈடுபாடுகள் மற்றும் நாட்டின் தற்போதைய முன்னேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
குறிப்பாக தற்போதைய சூழ்நிலையின் போது சீனாவின் தாராளமான உதவிகளையும் ஆதரவையும் பாராட்டிய அதே வேளையில், இலங்கையில் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிக்குமாறு சீன அரசாங்கத்திடம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
இரு தரப்பினரும் பன்முக உறவுகளையும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்பையும் பாராட்டினர்.