நீதி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு, இன்றும் நாளையும், முற்பகல் 9.30 முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா உள்ளிட்ட மேலும் பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில், பொதுமக்கள் சேவை பெறும் நோக்கில், இந்த நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி அமைச்சின் நடமாடும் சேவையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை உள்ளீர்க்கக்கூடாது என தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுக்க முயற்சித்தபோது, குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.