உலகம் எப்படி உருவானது என்ற ரகசியத்தை கண்டறிவதற்காக நாசா அனுப்பிய உலகின் மிகப்பெரிய, சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பான ‘ஜேம்ஸ் வெப்’பின் கேமிரா கண்ணாடி விண்வெளியில் நேற்று முழு அளவில் விரிந்தது.
உலகமும், அதன் உயிரினங்களும் எப்படி உருவானது என்பது பெரிய ரகசியமாக இருந்து வருகிறது. இதை கண்டுபிடிப்பதற்காக உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, பூமிக்கு அப்பால் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, பல ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஹப்பிள்’ என்ற டெலஸ்கோப்பை அனுப்பியது.
இந்நிலையில், நிலவில் இருந்து 3 மடங்கு தொலைவில் இருந்தபடி, சூரியனை சுற்றி வந்து விண்வெளியில் நடக்கும் சம்பவங்களை படம் பிடிப்பதற்காக ‘ஜேம்ஸ் ஹப்’ என்ற உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்பை கடந்த மாதம் 25ம் தேதி நாசா அனுப்பியது. இந்த திட்டத்துக்காக அது ரூ.75 ஆயிரம் கோடியை செலவிட்டுள்ளது. சூரியனை பல ஆண்டுகள் சுற்றி வந்து அண்டத்தில் நடக்கும் அதிசயங்களை இது படம் பிடித்து, நாசாவுக்கு அனுப்ப உள்ளது.
இந்நிலையில், இந்த டெலஸ்கோப்பை விண்வெளியில் நிலைநிறுத்தும் முதல் கட்ட பணியை நாசா வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் முக்கிய அம்சமாக, டெலஸ்கோப்பின் தங்க முலாம் பூசப்பட்ட கேமிரா கண்ணாடி விரிக்கப்பட்டது.
இதன்மூலம், இது துல்லியமாக படம் பிடிக்கும் திறனை அது அடைந்துள்ளது. தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே நாசா விஞ்ஞானிகள் இதை சாதித்தனர். ஹப்பிள் டெலஸ்கோப்பை விட ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் 100 மடங்கு சக்தி மிக்கது. விண்வெளியில் இது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றி வந்து ஆய்வுகள் செய்ய உள்ளது. பூமியில் இருந்து 15 லட்சம் கிமீ தொலைவில் ஜேமஸ் வெப் நிலை நிறுத்தப்பட உள்ளது.