சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும் – திகாம்பரம்

நாங்கள் மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் நடத்துவதில்லை. மக்களுக்கான அரசியலையே நடத்தி வருகின்றோம். இனியும் நடத்துவோம். இந்த ஆட்சி விரைவில் கவிழும். சஜித் தலைமையில் புதிய ஆட்சி மலரும். அந்த ஆட்சியில் நாங்கள் அமைச்சராக இருப்போம். மக்களுக்கு பல சேவைகளை வழங்குவோம். என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்  தெரிவித்துள்ளார்.

இராகலை, வலப்பனை பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் உடபுஸ்ஸலாவ, இராகலை, வலப்பனை போன்ற பகுதிகளில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரத்துடன் இன்றைய தினம் இணைந்து கொண்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ராம் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு,

நான் மக்களுக்காகவே அரசியல் செய்கின்றேன். மக்களைக் காட்டிக்கொடுத்து அரசியல் செய்வதில்லை. அப்படி செய்வதாக இருந்தால் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு சொகுசு வாகனங்களைப் பெற்றிருக்கலாம்.

அரசுக்கு வாக்களித்த மக்களே இன்று அரசுக்கு எதிராக திரும்பியுள்ளனர். ஆளுங்கட்சியில் உள்ளவர்கள்கூட ஆட்சியைக் கடுமையாக விமர்சிக்கின்றனர். பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகின்றது. உர நெருக்கடியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்டத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவே மீட்பாரென புகழாரம் சூட்டியவர்களே இன்று அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20 வருடங்களுக்கு இந்த அரசை அமைக்க முடியாதென மார்தட்டினர். ஆனால் 2 வருடங்களிலேயே ஆட்டம் கண்டுவிட்டது.

இப்படி நடக்குமென எமக்கு தெரியும். அதனால்தான் நாம் எதிரணி பக்கமே இருந்துகொண்டோம். எப்படியும் விரைவில் இந்த அரசு வீட்டுக்கு சென்றுவிடும். உடனே வீட்டுக்கு அனுப்பவும்கூடாது. இந்த ஆட்சியாளர்களின் பலவீனத்தை மக்கள் உணரவேண்டும். அப்போதுதான் இனியும் ஆசைவார்த்தைகளை நம்பி ஏமாறமாட்டார்கள்.

மலையகத்திலும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் இருக்கின்றார். அவரும் ஜனாதிபதியை கடவுள் என்றார். இப்போது 15 கிலோ கோதுமைமாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதையும் வரவேற்றுள்ளார். ஏனையோருக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ மாவுக்கு வெறும் 40 ரூபாதான் நிவாரணம். வெட்கமின்றி இதனையும் வரவேற்கின்றனர். சின்ன பையனால் முடியாது என சொன்னோம். நீங்கள் ஒரு லட்சம் வாக்குகளை வழங்கினர். இன்று நாங்கள் செய்த திட்டங்களை திறக்கும் திறப்பு விழாவைதான் நடத்தி வருகின்றனர். மகிந்த ராஜபக்ச மக்களை பார்த்து அன்று ‘செபத’ என கேட்டார். நாமும் இப்போது சந்தோஷமா என கேட்கின்றோம்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE