ஃபிரைடு ரைஸ் பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உருவெடுத்துள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் தெருக் கடையோ, ஃபைவ் ஸ்டார் உணவகமோ தவிர்க்கமுடியாத ஓர் உணவாகிவிட்டது ஃபிரைடு ரைஸ்.
வெஜ், சிக்கன், மட்டன், கோபி, மஷ்ரூம், பனீர், முட்டை… என நீள்கிறது இந்த ஃபிரைடு ரைஸ் வகைகள். தொட்டுக்கொள்ள கொஞ்சம் டொமட்டோ அல்லது சில்லி சாஸ் போதுமானது; கூடுதலாக பனீர் மசாலாவோ, சிக்கன், மட்டன் உள்ளிட்ட கிரேவியோ இருந்தால், விருந்துக்குச் சமமானது ஃப்ரைடு ரைஸ்! மீந்து, ஆறிப்போன உணவைச் சாப்பிட முடியாத சீனர்கள், கண்டுபிடித்ததுதான் ஃப்ரைடு ரைஸ் என்பவர்களும் இருக்கிறார்கள்.
சரி ஃபிரைடு ரைஸ் அடிக்கடி சாப்பிட்டால் என்னாகும்? விளக்குறார் டயட்டீஷியன் பத்மினி
ஃப்ரைடு ரைஸ் எளிதாகச் செய்யக்கூடிய ஓர் சீன வகை உணவு. இது நம் உடல்நலத்தை பல்வேறு வழிகளில் பாதிக்கக்கூடியதும்கூட. இதில் சேர்க்கப்படும் எண்ணெய், நம் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும்.
இதில் உள்ள அதிகப்படியான எண்ணெய், வயிற்றைப் பாதித்து, அதிக ஆசிட் உருவாக வழிவகுக்கும் ஃப்ரைடு ரைஸை அதிகம் சாப்பிட்டால், இதில் சேர்க்கப்படும் அதிக அளவிலான உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த உயர் ரத்த அழுத்தம் பல இதய நோய்கள் ஏற்பட வழியமைத்துக் கொடுத்துவிடும். இதய நோய்கள் இருப்பவர்கள், இந்த உணவைத் தவிர்ப்பதே நல்லது. அரிசியில் அதிக அளவில் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
அதிகப் பசியோடு இருக்கும்போது ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டால், அந்த அரிசியின் மூலமாக உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்து, உடல்பருமன் வரை கொண்டுபோய் விட்டுவிடும். அதோடு சிக்கன், மட்டன் என இறைச்சி சேர்ந்தது என்றால், எண்ணெய் அதிகம் சேர்ந்திருக்கும்.
அதிலும் பயன்படுத்தப்படும் பிராய்லர் கோழி, ஆட்டிறைச்சி எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பதிலும், உத்தரவாதம் இல்லை. எனவே, ஃப்ரைடு ரைஸ் சாப்பிட வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால், குறைவான எண்ணெய் ஊற்றி, வீட்டிலேயே செய்து சாப்பிடுவது நல்லது என கூறுகிறார்.