கமல் இயக்கிய விருமாண்டி படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர் மதுரையை சேர்ந்த சுஜாதா. அதன்பிறகு வந்த பருத்திவீரன் படத்தின் மூலம் புகழ்பெற்றதால், ‘பருத்தி வீரன்’ சுஜாதா என்றே அழைக்கப்படுகிறார். இதுவரை 90 படங்களில் நடித்துள்ள சுஜாதா தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். விரைவில் செஞ்சுரி அடிக்க இருக்கிறார். இவருக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று மினி ஆச்சி என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து சுஜாதா கூறியதாவது: நான் முதல் முதலில் விருமாண்டி படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. படத்தில் கதாநாயகி அபிராமிக்கு மதுரை வட்டார வழக்கு சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் என்னை முதலில் கேட்டார்கள்.
நான் பேசிக் காட்டியதைப் பார்த்த பிறகு , நீங்களே ஏன் ஒரு கதாபாத்திரம் செய்யக்கூடாது? என்ற கேட்ட கமல் நடிக்கவும் வைத்தார். அப்படித்தான் நான் பசுபதிக்கு ஜோடியாக அந்தப் படத்தில் பேச்சியாக நடித்தேன். விருமாண்டி வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பருத்திவீரன் படம் வந்தது. அந்த படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.
அதற்குப் பிறகு நிறைய படங்களில் நிறைய கதாபாத்திரங்களில் நடித்தேன். அண்மையில் வெளிவந்த ‘ ஆனந்தம் விளையாடும் வீடு வருவதற்குள் 90 படங்களைக் கடந்து விட்டேன். நான் ஒரு படத்தில் நடிக்கும் போது வாய்ப்பு தருபவர்கள் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு தருகிறார்கள். நான் என் கதாபாத்திரத்தை ஈடுபாட்டோடு செய்து விடுவேன். ஒரே இயக்குநரின் படங்கள் தொடர்ந்து நடிப்பதற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
பெரும்பாலும் அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து விட்டாலும் நான் இன்னும் ரஜினி, தனுஷ் இருவரின் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. எனக்குக் குணச்சித்திரம் மட்டுமல்ல நகைச்சுவை நடிப்பும் நன்றாக வரும் என்பதை சிறுத்தை சிவா தான் விஸ்வாசம் படத்தில் காட்டினார்.
எனக்கு மினி ஆச்சி என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கோலி சோடாவில் ஆச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததாலோ என்னவோ இப்படி ஒரு பட்டத்தை எனக்குக் கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். ஆச்சி மனோரமா பெரிய லெஜெண்ட். அவர் நடிப்பில் ஆயிரம் படங்களைக் கடந்தவர். அவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களிலும் அந்தப் பாத்திரமாக மாறி விடுபவர். அவர் நடிக்காத பாத்திரங்கள் இல்லை என்கிற அளவிற்கு நடித்தவர். அவர் நடித்த பாத்திரங்கள் எல்லாம் ஒரு பாடமாக இருக்கும் . அவரது ரசிகையான எனக்கு இப்படி மினி ஆச்சி என்று பட்டம் கொடுத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன்.
என்னைப் படங்களில் பார்க்கும் ரசிகர்கள் என்னைத் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்மணியாகத்தான் பார்க்கிறார்கள். இதை அவர்கள் என்னிடம் பேசும்போது என்னால் அறிய முடிகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் மதுரையில் வசிக்கிறேன். வாய்ப்புகள் வரும் போது சென்னை வந்தோ வெளியூர் சென்றோ நடித்துக் கொடுத்துவிட்டு வருகிறேன். மற்றபடி நான் என் அன்பான கணவர், என் அழகான பாசமான மகள்கள் என்கிற சின்ன குடும்பம் என்று வாழ்கிறேன். எனக்குக் கோட்டைகள் கட்ட ஆசை இல்லை.சின்ன சின்ன ஆசை கொண்ட எளிய மனுஷியாகவே நான் வாழ்ந்து வருகிறேன். என்கிறார் சுஜாதா.