40 வருடங்களை நிறைவு செய்த ‘வாழ்வே மாயம்’

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத சில காதல் படங்கள் கடந்த காலங்களில் வந்துள்ளன. அவற்றில் 1982ம் ஆண்டு பில்லா ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் கங்கை அமரசன் இசையமைப்பில், கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா மற்றும் பலர் நடித்த ‘வாழ்வே மாயம்’ படமும் ஒன்று.

1981ம் ஆண்டு தாசரி நாராயணராவ் இயக்கத்தில், சக்ரவர்த்தி இசையமைப்பில், நாகேஸ்வரராவ், ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படமான ‘பிரேமாபிஷேகம்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் ‘வாழ்வே மாயம்’.

இருந்தாலும் ஒரு ரீமேக் படம் போல இல்லாமல் நேரடிப் படம் பார்த்த அனுபவத்தையே இந்தப் படம் அந்தக் காலத்தில் கொடுத்தது. அதற்குக் காரணம் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பு. 80களில் இவர்கள் மூவரும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர்கள். அதிலும் கமல்ஹாசன் – ஸ்ரீதேவி, கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா ஜோடி தனித்தனியாக பிரபலமாக இருந்தாலும் மூவருமே ஒரே படத்தில் நடித்தது ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக இருந்தது.

பணக்கார இளைஞராக கமல்ஹாசன், ஏர்-ஹோஸ்டஸ் ஆன ஸ்ரீதேவியின் அழகில் மயங்கி, அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால், கமல்ஹாசனின் செய்கைகள் பிடிக்காமல் முதலில் அவரை உதாசீனப்படுத்துகிறார். பின்னர் காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும் நேரத்தில் கமல்ஹாசனுக்கு கேன்சர் நோய் இருப்பது தெரிய வருகிறது. தன்னால் தன் காதலி வாழ்க்கை கெட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறார். இதனால், ஸ்ரீதேவியை விட்டு விலகி விலைமாதான ஸ்ரீப்ரியா வீட்டிலேயே எந்நேரமும் இருக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீப்ரியாவைத் திருமணமும் செய்து கொள்கிறார் கமல்.. உண்மை என்னவென்று கமல் மீது வெறுப்படையும் ஸ்ரீதேவி வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். பிறகு உண்மை தெரிந்து கமலை சந்திக்க வருகிறார். ஆனால், அதற்குள் கமல்ஹாசன் இறந்துவிட கலங்குகிறார் ஸ்ரீதேவி.

கங்கை அமரன் இசையமைப்பில், அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி. அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள். ‘தேவி ஸ்ரீதேவி, என் ராஜாவே, மழைக்கால மேகம் ஒன்று, நீல வான ஓடையில், வந்தனம் என் வந்தனம், வாழ்வே மாயம்’ ஆகிய பாடல்கள் வானொலிகளில் அந்தக் காலத்தில் அடிக்கடி ஒலிபரப்பானவை. கமலும், ஸ்ரீதேவியும் திரையில் சிறப்பான காதல் ஜோடி என நிரூபித்த மற்றொரு படம் இது.

நேற்றுடன் இப்படம் வெளிவந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமா காதல் படங்களில் மட்டுமல்ல, கமல்ஹாசனின் காதல் படங்களிலும் முக்கியமான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE