உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு, சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, “ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்து வரும் பேச்சுகளில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
‘நேட்டோ’ எனப்படும், வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் விரும்பியது.எனினும், நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அது தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கடந்த மாதம் 24ம் திகதி , உக்ரைன் மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, ரஷ்ய படையினர் உக்ரைனுக்குள் நுழைந்தனர்; குண்டுகளை வீசியும், ஏவுகணைகளை வீசியும் உக்ரைன் மீதான தாக்குதல்களை தொடங்கினர். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், அதன் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதுவரை, 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள், நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே, உக்ரைனில் இனப்படுகொலை நடந்து வருவதாக குற்றஞ்சாட்டி, சர்வதேச நீதிமன்றத்தில், உக்ரைன் அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த சர்வதேச நீதிமன்றம், உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு, ரஷ்யாவுக்கு உத்தரவிட்டது.