உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து ஏவுகணைகள் மூலம் ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்தது. இதில் பல கட்டிடங்கள், பாலங்கள் வெடித்து சிதறின. மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் உக்ரைன் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையேயான பேர் 8 மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமீப நாட்களாக போரில் உக்ரைன் ராணுவம் முன்னேறியது. பல பகுதிகளில் ரஷ்யாவிடமிருந்து மீட்டது. மேலும், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவையும், ரஷ்யாவையும் இணைக்கும் பிரமாண்ட பாலத்தை உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் தகர்த்தது.
இதனால், ரஷ்யா தனது ஆயுதங்களை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.இந்தநிலையில், ரஷ்யா நேற்று திடீரென தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. வான் வழியாகவும், கடல் வழியாகவும் ஏவுகணைகள் மூலம் குண்டுமழை பொழிந்தது. குறிப்பாக தலைநகர் கீவ்வை வைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கீவ் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில மாதமாக போர் பதற்றம் தணிந்து மக்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை பலரும் அலுவலகங்களுக்கு சென்று கொண்டிருந்த நேரத்தில் இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியது. கீவ்வின் செவ்சென்கா மாவட்டத்தில் ஏவுகணைகள் அடுத்தடுத்து ஏவப்பட்டன. இதனால் அங்குள்ள பல அரசு கட்டிடங்கள் வெடித்து சிதறின.
பல இடங்களிலும் மக்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடினர். கீவ் நகரில் தொடர்ந்து சைரன் ஒலி கேட்கப்பட்டது.இதுதவிர கார்கிவ், டெர்னோபில், கெமிலினிஸ்டகி, ஜைடோமிர் மற்றும் கிரோப்யுன்ஸ்கி உள்ளிட்ட பல நகரங்களில் ஒரே நேரத்தில் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 பேர் பலியானதாகவும், 80 பேர் காயமடைந்தாகவும் கூறப்படுகிறது.
பல கட்டிடங்கள், பாலங்கள் தரைமட்டமாகி உள்ளன. மின் சேவை, குடிநீர் சேவை பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் கீவ் நகரில் மீண்டும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ரயில் சேவை நிறுத்தப்பட்டு, ரயில் நிலையங்கள் பதுங்குமிடங்களாக மாறி உள்ளன. மீண்டும் உக்ரைன் மக்கள் மத்தியில் மரண பீதி தொற்றி உள்ளது.* 84 ஏவுகணைகள் உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், ரஷ்யா நேற்று ஒரே நாளில் 84 ஏவுகணைகளை ஏவியதாகவும், அதில் 41 ஏவுகணை களை இடைமறிக்கும் ஆயுதம் மூலம் உக்ரைன் ராணுவம் தகர்த்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
புடின் எச்சரிக்கைதாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புடின் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கிரீமியா பாலத்தை தகர்த்து உக்ரைன் செய்த பயங்கரவாத செயலுக்கான பதிலடி இது. இனியும் பயங்கரவாத தாக்குதல்களை உக்ரைன் தொடர்ந்தால் எங்களின் பதிலடி கடுமையாக இருக்கும்’’ என எச்சரித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது வீடியோ பதிவில், ‘‘இந்த உலகில் இருந்து எங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டுமென திட்டமிட்டு ரஷ்யா இத்தகைய தாக்குதல் நடத்தி உள்ளது’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, ரஷ்ய விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஜி7 நாடுகளின் அவசர கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது.