தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட 2 சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் இருந்து திருடுபோன பழங்கால சிலைகள் மற்றும் தொன்மையான பொருட்கள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு, சிலைகளை மீட்கும் பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாகை திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர சுவாமி கோயிலில் திருடப்பட்ட தேவி, விநாயகர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. கோயிலில் விநாயகர் சிலை திருடுபோனதாக பாலு என்பவர் புகார் அளித்திருந்தார். தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில் 11 சிலைகள் திருடப்பட்டது அம்பலமானது. சோமாஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், தேவி, அஸ்திரதேவர், பிடாரி அம்மன், நவக்கிரக சூர்யா, போக சக்தியம்மன், நடன சம்பந்தர், அம்மனுடன் சந்திரசேகர், நின்ற சந்திரசேகர் மற்றும் நின்ற விநாயகர் சிலை உள்ளிட்ட 11 சிலைகள் திருடப்பட்டது கண்டறியப்பட்டது.
தற்போது, அமெரிக்க அருங்காட்சியகத்தில் உள்ள தேவி மற்றும் விநாயகர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. மாயமான மீதமுள்ள சிலைகளை கண்டறிய சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விரு சிலைகளும் 1970ம் காலகட்டத்தில் விற்பனை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிலை கடத்தல் மன்னன் சுபாஷுக்கும் இதில் முக்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2 சிலைகளையும் அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.