ஒடிசாவில் நடந்த கோர விபத்தில், ஒரே நேரத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரிதும் பாதுகாப்பானது என கூறப்பட்ட எல்.எச்.பி., பெட்டிகள், உண்மையில் கை கொடுத்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது; அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதில் சொகுசு இருக்கைகள், மொபைல் போன் ‘சார்ஜிங்’ வசதி உட்பட பல்வேறு வசதிகள் இருக்கும்.
எல்.எச்.பி., சாதாரண பெட்டிகளில் 80 படுக்கைகளும், ‘ஏசி’ பெட்டியில் 72 படுக்கைகளும் இருக்கும்.
ரயில்வே அதிகாரிகள் சிலர் கூறியதாவது: எல்.எச்.பி., பெட்டி இணைக்கப்பட்ட ரயில்கள் விபத்தில் சிக்கினால், பெட்டிகள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக மேல் ஏறி நிற்காது. இதனால், பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படாது. ஆனால், ஒடிசாவில் நடந்த விபத்து அப்படி அல்ல.
தடம்புரண்ட ரயில் அருகே உள்ள பாதையில் கிடந்தபோது, அதன் மீது மற்றொரு ரயில் மோதியதால் தான் இந்த அளவுக்கு பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவே, பழைய நீல நிற ஐ.சி.எப்., வகை பெட்டிகளாக இருந்தால், உயிரிழப்புகள் மேலும் அதிகமாக இருந்திருக்கும்.