‘இதுபோன்ற விபத்தை பார்த்ததில்லை!’ இந்தியா ரயில் விபத்து

‘வாழ்நாளில் இதுபோன்ற ஒரு பயங்கர விபத்தை சந்தித்ததே இல்லை. எங்களோடு பயணித்தவர்கள், எங்கள் கண்ணெதிரே உயிரிழந்தனர். நாங்கள் வணங்கும் தெய்வம் தான் காப்பாற்றியது’ என, ஒடிசா ரயில் விபத்தில் உயிர் பிழைத்த மூன்று பேர், உணர்ச்சி பொங்க கூறினர்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ராஜலட்சுமி, தென்காசியை சேர்ந்த ரமேஷ், ராமநாதபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் ஆகிய மூன்று பேர், நேற்று மதியம், 1:50 மணிக்கு, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து, ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானத்தில், தங்களது சொந்த செலவில் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், அவர்களை, உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

பல்லாவரத்தைச் சேர்ந்த டி.ராஜலட்சுமி: சென்னை லயோலா கல்லுாரியில் படித்து வருகிறேன். ‘இன்டர்வியூ’க்கு கோல்கட்டா சென்று விட்டு, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு, 7:00 மணிக்கு விபத்து ஏற்பட்டது. நான், ‘பி 8’ பெட்டியில் பயணம் செய்தேன்.

ராமநாதபுரத்தை சேர்ந்த என்.நாகேந்திரன், 36, கூறியதாவது:கோல்கட்டாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணித்தேன். இரவு 7:00 மணிக்கு, ஒடிசா, பாலசோர் இடத்திற்கு வந்தபோது, சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியது.ரயில் போன வேகத்தில் மோதியதில், பொது பெட்டிகள் உருண்டன. இந்த பெட்டிகளில் தான் உயிரிழப்பு, காயம் அதிகமாக ஏற்பட்டது. நான் பயணித்த ‘பி1’ பெட்டி, தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியது. ‘பி5’ பெட்டி உருண்டு கவிழ்ந்தது. இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. இந்த விபத்தில் நான் உயிர் பிழைத்தேன் என்பது பெரிய விஷயம்.இந்த விபத்து நடந்தபோது, உயிருடன் இருப்போமா, இருக்க மாட்டோமா என்பது, ஐந்து நிமிடத்திற்கு தெரியவில்லை. உள்ளூர் மக்கள் உடனடியாக விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம், நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும், துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொய்வின்றி நடக்கும் வேளையில், விபத்தில் சிக்கிய தமிழர்களுக்கு உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்ப தேவையான உதவிகளை செய்ய கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.அக்குழுவில், ரயில்வே பயணி வசதிகள் ஆலோசனைக் குழு தேசிய உறுப்பினர் ரவிச்சந்திரன் – 98409 45919; தமிழக பா.ஜ., பிற மொழி பிரிவு தலைவர் ஜெயக்குமார் – 94440 49949; மாநில ஊடக பிரிவு முன்னாள் தலைவர் பிரசாத் – 98401 70721 ஆகியோர் உள்ளனர். இக்குழு ஒடிசா விரைந்துள்ளது.விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர் யாருக்காவது உதவி தேவைப்பட்டாலும், மேற்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE