
ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார்.
அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளையும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சரத் குமார மேலும் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இவ்வருடத்தில் மருத்துவ உதவிக்காக சுமார் 1500 மில்லியன் ரூபா தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2022-08-01 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் குவிந்து கிடந்த 8,210 விண்ணப்பங்கள் தொடர்பில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கான பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் ஜனாதிபதி நிதியத்தின் புதியச் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார
வழங்கிய பணிப்புரைக்கமைய அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய இதுவரை 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனினும், வருட இறுதியில் கிடைக்கப்பெற்ற மற்றும் பல்வேறு காரணங்களால் பணிகளை பூர்த்திச் செய்ய முடியாமல் போன 642 விண்ணப்பங்களுக்கு அவசியமான நிதியை திரட்டும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எதிர்வரும் சில வாரங்களில் அப்பணிகளைப் பூர்த்திச் செய்ய முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆதரவற்ற நோயாளர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதை துரிதப்படுத்துமாறும் குவிந்துள்ள விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், 2023 ஜனவரி மாதம் முதல் அதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறினார்.
அதற்கமைய, மருத்துவ உதவிகளுக்கான விண்ணப்பங்களுக்கு மிக குறுகிய காலத்துக்குள் கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொலைவிலுள்ள நோயாளிகள் மருத்துவ உதவித் தொகையைப் பெறுவதற்காக நகரங்களுக்கு வருவதை குறைப்பதற்காக ஜனாதிபதி நிதியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு மேலதிகமாக, புதிய மருத்துவமனைகளைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
சத்திரசிகிச்சை மற்றும் ஏனைய சிகிச்சைகளுக்காக தற்போது வழங்கப்பட்டு வரும் நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கு தேவையான பரிந்துரைகளை பெற்றுக்கொள்வதற்கென நியமிக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர்கள் அடங்கிய குழுவின் பரிந்துரைக்கமைய மருத்துவ உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதற்கமைய, 2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும்.
அத்துடன் உதவி வழங்குவதற்கான மருத்துவப் பட்டியலை புதுப்பிக்கும் வகையில் தற்போது உதவி வழங்கப்படும் நோய்களுக்கு மேலதிகமாக மேலும் சில நோய்களை பரிந்துரைக்குமாறும் மேற்படி குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ உதவி பெறுவதற்காக ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து மற்றும் ஏனைய பொருளாதாரச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து பணம் செலுத்தப்படும் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்குமாக 06 தடவைகளுக்கு குறுந்தகவல்கள் (SMS) அனுப்பப்படும். இந்நடவடிக்கைகளை 2023 ஆம் ஆண்டு முதல் மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.