இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 சிறுபோகத்திற்காக இவை இறக்குமதி செய்யப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை வரையில், சிறுபோகத்திற்காக 512,000 ஹெக்டேயர் நிலப்பரவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
304,734 ஹெக்டேயரில் பயிரிட்ட 490,515 விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள யூரியா உரத்தின் மொத்த அளவு 29,740 மெட்ரிக் தொன் ஆகும்.
வட மத்திய மாகாணத்திலேயே அதிகளவு நிலப்பரப்பில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், வட மத்திய மாகாணத்திற்கு 9,623 மெட்ரிக் தொன் யூரியா உரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
சுமார் 35,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் மீதமுள்ளமையால், அவை பெரும்போகத்தை முன்னிட்டு விநியோகிக்கப்படவுள்ளன.
நெற்செய்கைக்கு மேலதிகமாக சோளம், உருளைக்கிழங்கு மற்றும் தேயிலை செய்கைகளுக்கு யூரியா உரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.