ஐக்கிய தேசியக் கட்சியின் 76வது ஆண்டு நிறைவு விழா “எக்வேமு” என்னும் கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் செப்டம்பர் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
சுதந்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த காலத்தில் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் இலங்கை மீதான பற்று அதிகம் தேவைப்பட்டது.
இதற்கு உந்துசக்தியாக 1946 செப்டம்பர் 6 ஆம் திகதியன்று அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
கட்சியை உருவாக்கும் பிரேரணையை அரச சபை உறுப்பினர் எஸ். நடேசன் முன்வைத்ததுடன், அதனை அரச சபை உறுப்பினர் டி.பி. ஜாயா வழிமொழிந்தார்.
மஹாமான்ய டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சி, 1948 இல் பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபடுவதற்கான போராட்டத்தில் முன்னின்று செயற்பட்டது.
சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே உருவாக்கப்பட்டார்.
அவர் விவசாய குடியேற்றங்களை விஸ்தரித்து நாட்டின் விவசாயத்துறைக்கு வலுவூட்டினார்.
1977 ஆம் ஆண்டு, இந்நாட்டில் திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியதும் ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
இலவச பாடசாலை புத்தகங்கள், ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள், முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டிற்கு கொண்டுவந்தது.
இளைஞர்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கில், இளைஞர் நகரம், இளைஞர் சேவை மன்றம் போன்ற திட்டங்களையும் நிறுவனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி அறிமுகப்படுத்தியது.
நாட்டின் அபிவிருத்தித் திட்டத்தின் திருப்புமுனையாக அமைந்த, மகாவலி திட்டமும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் காலகட்டத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாச, டி.பி. விஜேதுங்க மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் கடந்த 75 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடத்தியுள்ளனர்.
கட்சியும் நாடும் தீர்மானமிக்க தருணத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், புதிய நோக்கு தேவையாகவுள்ள ஒரு சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சி தனது 76 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.