விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் விடுதலை!

மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே படுகொலை வழக்கில் இருந்து அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என கூறப்படும் செல்வராஜா பிரிபாஹகரன் (மோரிஸ்) ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட 16 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குறித்த இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு கம்பஹா இலக்கம் 01 உயர் நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளை பரிசீலித்த நீதிபதி சஹான் மாபா பண்டார, சந்தேக நபர்களை குறித்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்தார்.

ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரியவில் புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டிருந்த போது விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இறக்கும் போது, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராகவும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.

குறித்த சம்பவத்துடன் நேரடித் தொடர்புகளைக்கொண்டுள்ளதாகத் தெரிவித்து 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி, அப்போதைய கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் ஏ.லக்ஷ்மன் குரே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE