சரியான நேரம் வரும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் – மஹிந்த
சரியான நேரம் வரும்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அது வரை அரசியலில் தொடர்ந்து நீடிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாம் தலைமை தாங்க வேண்டுமா என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தேவைப்பட்டால் பதவி விலகவும் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியாக இருப்பதால் நீதிமன்றப் பணிகளிலும் ஈடுபட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறும் போது தன்னிடம் கேட்டிருந்தால், நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்திருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தபாய ஒரு அரசியல்வாதி அல்ல. நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து அனர்த்தங்களுக்கும் கோட்டாபய ராஜபக்ச பொறுப்பல்ல. இவை அனைத்திற்கும் நான் உட்பட கடந்த அரசாங்கங்கள் பதிலளிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அவர் நம்பிய நிபுணர்களின் ஆலோசனையின்படி செயல்பட்டார்.
எனவே அவரைக் குறை கூற முடியாது. பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய போது நல்ல நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தினார். ஜனாதிபதி என்ற முறையில் அவர் பல அழுத்தங்களுக்கு உள்ளானார். அவர் தனக்கு முன் இருந்த பணியை சரியாக முடித்திருக்க வேண்டும்.
பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர் என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு சகல ஆதரவையும் வழங்குவதாக தெரிவித்தார்.
இதன்போது, நாட்டின் பிரச்சினைக்கு தீர்வுகாண அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டுமெனவும், நாட்டுக்காக அனைவரும் ஒரே கருத்துடன் செயற்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.