தொழிலதிபரை கடத்திய 6 பேர் கைது

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், தொழிலதிபரை வீடு புகுந்து பொம்மை துப்பாக்கி காட்டி மிரட்டி கடத்திய வழக்கில், ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

தி.நகர் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 46. இவர், ரியல் எஸ்டேட் மற்றும் சவுடு மணல் வியாபாரம் செய்து வருகிறார்.இவர், மயிலாடுதுறை நீடூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ், 42, என்பவரிடம் வியாபாரம் தொடர்பாக, 5 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.கடன் பெற்ற பணத்தை பல முறை கேட்டும், சரவணன் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கிய ராஜ், தன் ஆதரவாளர்களுடன், நேற்று முன்தினம் மாலை தி.நகரில் உள்ள சரவணன் வீட்டிற்குச் சென்றார்.

பின், சரவணனை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றியதுடன், அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த பென்ஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ என, இரண்டு சொகுசு கார்களையும் எடுத்துச் சென்றனர்.சரவணன் கடத்தப்பட்டது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.இதில், ஓ.எம்.ஆர்., சாலையில் திருப்போரூர் நோக்கிச் சென்றவர்களை, சோழிங்கநல்லுார் அருகே, சரவணனின் இரு கார்களையும், கண்ணகி நகர் போலீசார் பிடித்தனர்.

அங்கு சென்ற மாம்பலம் போலீசார், பென்ஸ் காரை ஓட்டி சென்ற ஆரோக்கிய ராஜ், 42, மற்றும் பி.எம்.டபிள்யூ காரை ஓட்டி சென்ற கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த் குரு, 23, திருப்பூரை சேர்ந்த அப்ரோஸ், 23, மற்றும் மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த அஜய், 24, மதுரை கேபுதுாரைச் சேர்ந்த விஜயபாண்டி, 25, கோவை காந்திபுரத்தை சேர்ந்த நாகேந்திரன், 31, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து, சரவணன் வீட்டில் இருந்து திருடப்பட்ட இரண்டு சொகுசு கார்கள், விலை உயர்ந்த வாட்ச், ஒன்பது மொபைல் போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், இருசக்கர வாகனம், ஏழு மொபைல் போன்கள், கத்தி,இரண்டு பொம்மை துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Radio
WP Radio
OFFLINE LIVE