மிஷன் இந்தியன் ஓஷன்’ என்ற பெயரில் இந்தியப் பெருங்கடலில் தன் பலத்தை அதிகரித்து வரும் சீனாவின் முயற்சி, இந்தியாவுக்கு எதிர்காலத்தில் பெரும் ஆபத்தாக அமையலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியா – சீனா இடையே எல்லைப் பிரச்னை தீவிரமாக உள்ளது. ஏற்கனவே பல நாடுகளை கைப்பற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது; நம் நாட்டில் சில பகுதிகளுக்கும் உரிமை கோரி வருகிறது.
இந்நிலையில், உலகின் வல்லரசாக மாறுவதற்கான முயற்சியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக அந்நாடு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தன் அண்டை நாடுகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாகக் கூறி கடன் அளித்து, அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது.
இந்நிலையில், ஆப்ரிக்க நாடான டிஜிபோட்டியில், 47 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட துறைமுகத்தை சீனா அமைத்துள்ளது. கடந்த 2016ல் துவங்கிய இந்தப் பணி தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாக, செயற்கைக்கோள் படங்கள் ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன.இது குறித்து, நம் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது:டிஜிபோட்டி துறைமுகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது, செங்கடல் மற்றும் ஆடன் வளைகுடாவுக்கு இடையில் உள்ளது.
மேலும், உலகிலேயே அதிக வர்த்தகம் நடக்கும் சூயஸ் கால்வாய் செல்லும் வழியில் இது அமைந்துள்ளது.டிஜிபோட்டியில் இருந்து இந்தியப் பெருங்கடலை கண்காணிக்க முடியும். தற்போது டிஜிபோட்டி துறைமுகத்தில், சீனாவின் பிரமாண்ட போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சில போர்க் கப்பல்களையும் அங்கு நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.நம் மற்றொரு அண்டை நாடான இலங்கையின் அம்பன்தோட்டாவில், சீனாவின் உளவுக் கப்பலான ‘யுவான் வாங் – 5’ ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிஜிபோட்டியில் சீனாவின் போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை சாதாரணமாக பார்க்கக் கூடாது.
இலங்கை அரசைப் போல டிஜிபோட்டி அரசும், சீனாவின் கடனை அடைக்க முடியாமல், அதனிடம் சரணடைந்துள்ளது. இந்த இரண்டு துறைமுகங்களைத் தவிர, பாகிஸ்தானின் கவாடர் துறைமுகத்தையும் சீனா எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.இந்தியப் பெருங்கடலின் பல இடங்களில், அமெரிக்கா தன் போர்க் கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவின் இந்த முயற்சி, அமெரிக்காவுக்கு சவால் விடுக்க மேற்கொள்ளப்பட்டதாக கருத முடியாது. எதிர்காலத்தில், இந்தியப் பெருங்கடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே சீனாவின் முக்கிய நோக்கமாக இருக்கும். அவ்வாறு நடந்தால், இந்தியாவுக்கு பெரும் ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதையடுத்து இந்யா எச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க
வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.